பெண்ணை டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்து ரூ.60 லட்சம் மோசடி... கைதாகி கூலாக போஸ் கொடுத்த நபர்கள்
மும்பை காவல்துறையில் வழக்குப்பதிவு செய்திருப்பதாக மிரட்டி மதுரை தம்பதியிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் மோசடியாக பெற்று பதுங்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு பெறப்பட்ட மனுவின் அடிப்படையில், காவல்துறை விசாரணை முடுக்கி விடப்பட்டது.
அவற்றில் குறிப்பிட்ட ஒருவரது மனுவின்படி, நவம்பர் 10ம் தேதி அவருடைய செல்பேசிக்கு மர்ம நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த மர்ம நபர் மும்பை காவல் நிலைய காவலர் விஜய் கண்ணா என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார்.
பின்னர் மனுதாரரின் பெயரில் போலியாக வங்கி கணக்கு தொடங்கி பல கோடி அளவில் பணபரிவர்த்தனைகள நடைபெற்று இருப்பதால் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது மனைவியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக விஜய் கண்ணா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மனுதாரரின் மனைவியை அவர்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளனர்.
அப்போது, மனுதாரரின் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, வங்கி கணக்கில் உள்ள பணம் ரூ.68,17,000-ஐ உடனே அனுப்ப வேண்டும் என மிரட்டியுள்ளனர். பயந்து போன மனுதாரர் மர்ம நபர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ.60,72,000-ஐ மனைவி மற்றும் தனது வங்கி கணக்கு மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார்.
அவர்கள் மேலும் பணம் செலுத்தும் படி கூறவே மனுதாரர் சந்தேகமடைந்து தன்னை பணமோசடி வழக்கில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள், தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த உமர் பாரூக் (28), முகமது ரியாஸ் (29), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஃபைசல் ஹெக் (49), அப்துல் கஃபூர் (43), முகமது சையது (39) மற்றும் முகமது சமீம் (34) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கேரளா சென்ற சைபர் க்ரைம் தனிப்படையினர் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.
இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வெளியிட்ட அறிவிப்பில், ''இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவற்றை தரும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால், பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.