100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம்; திமுக சார்பில் போராட்டம் நடத்த திட்டம்
100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக திமுக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை, கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், '' ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் செல்வேன். ஆனால் கொளத்தூருக்கு மட்டும் எப்படியாவது 10 நாட்களுக்கு ஒரு முறை நான் வந்துவிடுவேன். என்னதான் நான் முதலமைச்சராக இருந்து பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை நடத்தி, பல அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் அல்லது சில பொது நிகழ்ச்சிகளுக்குச் சென்று பல வரவேற்புரைகளை தருகின்றபோது, அதில் எனக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, இந்த கொளத்தூருக்கு நீங்கள் தருகின்ற வரவேற்பில் தான் அதிக மகிழ்ச்சி ஏற்படுவதுண்டு.
இந்தத் தொகுதியில் நாம் ஏற்படுத்தி வழங்கியிருக்கக்கூடிய திட்டங்களை பார்க்கின்ற போது, இது திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் என்று இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் அது மக்களிடத்தில் பேசக்கூடிய, மக்களிடத்தில் பதியக்கூடிய அளவிற்கு பல திட்டங்களை நாம் இந்த தொகுதிக்கு ஆற்றியிருக்கிறோம்.
'Office Space' வேண்டும் என்று சிந்தித்து தான் நாம் உருவாக்கியிருக்கும் திட்டம் தான் “முதல்வர் படைப்பகம். இன்றைக்கு அரசு மருத்துவனைகளை எடுத்துக் கொண்டால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை – இங்கெல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் அந்த கூட்டத்தை ஓரளவு குறைக்கவேண்டும் என்பதற்காக, இங்கே ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த பெரியார் அரசு மருத்துவமனையில் தரத்தை உயர்த்தவேண்டும் என்று எளிதில் அணுகும் அளவிற்கு மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு பெரிய மருத்துவமனையை உருவாக்கி ஸ்டான்லியை விட, ராஜீவ்காந்தி மருத்துமனையை விட, கிண்டியில் அமைந்திருக்கக்கூடிய அரசு மருத்துமனையை விட, சிறப்பான மருத்துவமனையில் ஒன்றாக இன்றைக்கு பெரியார் அரசு மருத்துவமனை விளங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகதான், இன்றைக்கு, 17 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி ஆகியவற்றிற்கான திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறோம். 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறோம். நீங்கள் எல்லாம் மனதார வாழ்த்த வேண்டும். குறிப்பாக நாம் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு தான் அதிகமான திட்டங்கள், சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், பெண்களை படிக்க வைத்தால், பெண்கள் முன்னேற்றினால், அந்த குடும்பம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் தான்.
பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கு காரணம் என்னவென்று கேட்டால், பெண்கள் நினைத்தால் எதையும் செய்யக்கூடியவர்கள். அதனால் தான் பெண்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தைத் தந்து கொண்டிருக்கிறோம். இன்னும்கூட சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவி தான் – அதுபோல தான் ஒவ்வொருவரும். அதனால் தான் மணமக்களிடத்தில் நான் பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும் அந்த நிலையில் நீங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, அழகான குழந்தைகளை நீங்கள் பெற்றெடுக்க இருக்கிறீர்கள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று சொல்வதைவிட, அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்று சொல்கிறார்கள். முன்பெல்லாம், சிவப்பு முக்கோணம் போட்டு, நாம் இருவர் நமக்கு மூவர் என்று இருந்தது - அது படிப்படியாக குறைந்து, நாம் இருவர் நமக்கு இருவர் என்று இருந்தது – இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் – நாளைக்கு இதுவும் மாறலாம் – நாம் இருவர், நமக்கு ஏன் இன்னொருவர்? என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.'' என்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ''100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சார்பிலும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, '' எடப்பாடி பழனிசாமி எப்போதும் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படாமல், எதிரிக்கட்சித் தலைவராகவே செயல்படுகிறார்.''என்றார்.
எஸ்ஐஆர் மூலமாக 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, '' அது குறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்கு பின்பு பேசுகிறேன்.'' என தெரிவித்தார்.