காயத்திலிருந்து மீண்டார் கில்.. மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார்

காயத்திலிருந்து மீண்டார் கில்.. மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார்

காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சிக்குத் திரும்புவதை விட வேறு எதுவும் ஒரு விளையாட்டு வீரருக்குச் சிறப்பானதாக இருக்க முடியாது என்று இந்திய டி20 அணி துணைக் கேப்டன் ஷுப்மன் கில் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது சமீபத்தில் முடிவடைந்தது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை தொடங்கவுள்ளது.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்த தொடரை இரு அணிகளும் எதிர்கொள்ள இருப்பதால், இதில் எந்த அணி தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது காயத்தைச் சந்தித்திருந்த ஷுப்மன் கில், முழு உடற்தகுதியை எட்டியதைத் தொடர்ந்து, டி20 அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் இந்திய டி20 அணியுடன் இணைந்து, தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனது உடற்தகுதி குறித்து ஷுப்மன் கில் பேசும் காணொளியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

அக்காணொளியின் பேசிய ஷுப்மன் கில், "நான் தற்சமயம் மிகவும் நன்றாக உணர்கிறேன். பிசிசிஐ (BCCI) பயிற்சி அமர்வில் கலந்துகொண்ட நாளிலிருந்து இன்று வரை, எனக்கு நிறைய உடல் திறன் பயிற்சி அமர்வுகள் இருந்தன. எனவே, இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சிக்குத் திரும்புவதை விட வேறு எதுவும் ஒரு விளையாட்டு வீரருக்குச் சிறப்பானதாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். எந்த விளையாட்டு வீரருக்கும் அது ஒரு சொர்க்கம்"என்று கூறியுள்ளார்.

முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது கழுத்து பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஷுப்மன் கில் களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். அதன்பின் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக, முதல் பொட்டியில அவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் ரிஷப் பந்த அணியின் கேப்டனாக வழிநடத்தினார்.

அதன்பின், அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்தும் விலகிய நிலையில், இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் தற்சமயம், முழு உடற்தகுதியை எட்டியதுடன் இந்திய டி20 அணியுடனும் இணைந்துள்ள செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.