அறிமுக போட்டியில் சதம்.... உலக சாதனையை சமன் செய்த பரோடா வீரர் பாஸி

அறிமுக போட்டியில் சதம்.... உலக சாதனையை சமன் செய்த பரோடா வீரர் பாஸி

டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற உலக சாதனையை பரோடா வீரர் அமித் பாஸி சமன் செய்து அசத்தியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பரோடா மற்றும் சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மாணித்து சர்வீசஸ் அணியை பவுலிங் செய்ய அழைத்தது.

இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணிக்கு அறிமுக வீரர் அமித் பாஸி மற்றும் ஷஸ்வாத் ராவத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அமித் பாஸி ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய ஷஸ்வாத் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நினத் ரத்வா, ஷிவாலிக் சர்மா, விஷ்னு சொலங்கி ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இருப்பினும் தனது அதிரடியை நிறுத்தாத அமித் பாஸி 44 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். மேற்கொண்டு இந்த ஆட்டத்தில் 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அமித் பாஸி 10 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 114 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் பானு புனியா 28 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுக்க, பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய சர்வீசஸ் அணிக்கு கன்வர் பதாக் மற்றும் ரவி சௌகான் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் அரைசதம் கடந்த கன்வர் பதாக் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், ரவி சௌகான் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 51 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் மோஹித் அஹ்ல்வாத் 41 ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.

இதனால் சர்வீசஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. பரோடா அணி தரப்பில் ராஜ் லம்பானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பரோடா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.

அமித் பாஸி உலக சாதனை

இந்த போட்டியில் பரோடா அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய அமித் பாஸி 114 ரன்களை அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பிலால் ஆசிஃப், பாகிஸ்தானின் உள்நாட்டு டி20 தொடரின் போது 48 பந்துகளில் 114 ரன்களை எடுத்ததேச சாதனையாக இருந்தது.