சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் மாயா, சஹஜாவுக்கு வைல்டு கார்டு

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் வரும் 27–ம் தேதி முதல் நவம்பர் 2–ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த சீசனின் வெற்றியாளரான செக் குடியரசின் 20 வயதான லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவுக்கு போட்டித் தரவரிசையில் முதலிடமும், இரண்டு குழந்தைகளின் தாயான ஜெர்மனியின் தாட்ஜானா மரியாவுக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2024-ம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியவரும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், உலகத் தரவரிசையில் 69–வது இடத்தில் உள்ளவருமான குரோஷியாவின் டோனா வெக்கிச், இந்த ஆண்டு விம்பிள்டன் காலிறுதியை எட்டிய நியூஸிலாந்தின் லுலு சன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.31.58 லட்சமும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.11.48 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. ஒற்றையர் பிரிவில் 4 பேருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, சஹஜா யாமலபள்ளி, சுலோவேக்கியாவின் மியா போகன்கோவா, பிரான்ஸின் லூயிஸ் போய்சன் ஆகியோர் வைல்டு கார்டின் வழியாக பங்கேற்கின்றனர்.
இதில் 16 வயதான மாயா ராஜேஷ்வரன் தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆவார். மியா போகன்கோவா இந்த ஆண்டு விம்பிள்டன் ஜூனியரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.