யு19 உலகக் கோப்பை 2026: இந்தியா vs வங்கதேச அணிகள் இன்று மோதல் - வெற்றி யாருக்கு?
ஐசிசி ஆடவர் யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்திய யு19 அணியை எதிர்த்து வங்கதேச யு19 அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இப்போட்டி புலவாயோவில் உள்ள குயீன்ஸ் போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை, வங்கதேச அணி இந்தியாவில் வந்து விளையாட மறுப்பு என பல்வேறு சார்ச்சைகள் தொடர்ந்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் தற்சமயம் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இந்த அண்டர்19 உலகக் கோப்பை போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதன் காரணமாக இப்போட்டி மீதான எதிர்பார்ப்பும் இருநாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் ஏற்கெனவே தொடரை வெற்றியுடன் தொடங்கி இருக்கும் இந்திய அணி, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று அசத்துமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.
சர்வதேச அரங்கில் இந்தியா மற்றும் வங்கதேச யு19 அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 21 போட்டிகளில் வென்றுள்ளது, வங்கதேசம் 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது, மேலும் ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
அதேசமயம் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் இரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அதில் இந்திய அணி 5 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி ஆடவர் யு19 உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது. இதில் தொலைக்காட்சி ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த தொடரை நேரலையில் காண முடியும். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டாரில் இந்த போட்டிகளை நேரலையில் காணலாம்.