தவெக கூட்டணிக்கு டிடிவி தினகரன் வராதது ஏமாற்றமா? செங்கோட்டையன் நறுக் பதில்
தவெக கூட்டணிக்கு டிடிவி தினகரன் வராதது ஏமாற்றம் இல்லை என்று அக்கட்சியின் உயர்மட்ட மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த தவெக உயர்மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ‘‘தவெக கூட்டணிக்கு டிடிவி தினகரன் வரவில்லை என்பது ஏமாற்றம் இல்லை. அவர் நிலைமை அப்படி இருக்கிறது. எங்களோடு வர வேண்டுமென நினைத்தார். அவரது சூழ்நிலை குறித்து என்னால் கூற முடியாது. அவர் எங்கு சென்றாலும் வாழ்க.
ராமதாஸ் தரப்பு தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக செய்தியில் பார்த்தேன். நல்லது நடக்கட்டும். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது 100 நாட்கள் கூட கட்சி ஓடாது என சொன்னார்கள். ஆனால் அவர் உயிரோடு இருக்கும் வரை முதலமைச்சராக இருந்தார். அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த போதும் கூட அவர் வெற்றி பெற்றார்’’ என தெரிவித்தார்.
தவெக மீதான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘‘பொதுவாக, ஒருவர் மீது பல்முனை தாக்குதல் நடத்தப்பட்டால் அவர் மாபெரும் வெற்றியை பெறப் போகிறார் என அர்த்தம். இதற்கு முன்பு விஜய் ஏதேனும் கூட்டணியில் இணைவார் என அவர் நினைத்தார்கள். ஆனால், இன்று நிலைமை மாறும் போது, அதிமுகவினர் அவர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். திமுகவிற்கு பி டீமாக அதிமுக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஓபிஎஸ் தவெக கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு, ‘‘ஒவ்வொருவர் குறித்தும் நான் சொல்லி முடிக்கும் முன்பே, டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள். பிரச்சனை எங்களுக்குதான் தெரியும். கூட்டணி குறித்து நான் சொல்லாமல் இருக்கும் வரை நல்லது’’ என கூறினார். அண்ணாவை அதிமுக மறந்துவிட்டது என விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘அதிமுக, திமுக என இருவரும் அண்ணாவை மறந்து விட்டனர். அதனால் தான் நான் வெளியில் வந்தேன்.
ஜெயலலிதா, அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களை போடாமல், ஒருவர் படத்தை மட்டும் போட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். எல்லோரையும் மறைத்துவிட்டு ஒருவரை உருவாக்குவது இயலாத காரியம். யாரால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது. எனது பாக்கெட்டில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படம் இருக்கிறது. இவர்களை என்னால் மறக்க முடியாது. இதனை வைக்க தவெக இயக்கத்தில் ஜனநாயகம் இருக்கிறது’’ என பதிலளித்தார்.