சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து

சென்னை விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பயணிகள், மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அவசரமாக அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது தளத்தின் புறப்பாடு பகுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் விற்பனை அலுபலகத்தில் இன்று பிற்பகல் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் சென்னை விமான நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவசர கால தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் அதிக அளவில் புகை சூழ்ந்து இருந்ததால் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தீயை அணைக்க முடியாமல் திணறினர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய தீயணைப்புத் துறையின் இரண்டு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்ததோடு புகை மண்டலத்தையும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

மேலும் பாதுகாப்பு கருதி தாம்பரம், வேளச்சேரி பகுதிகளில் இருந்தும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் வரவைக்கப்பட்டன.

சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் அலுவலகத்தில் தீயை முழுவதுமாக அணைத்து முடிக்க சுமார் 40 நிமிடங்கள் ஆனது. மேலும், அறை முழுவதும் நிலவிய புகை மண்டலத்தையும் தீயணைப்பு வீரர்கள் முற்றிலுமாக வெளியேற்றினர்.

பின்னர் இந்த தீ விபத்து குறித்து சென்னை விமான நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முதற்கட்ட தகவலில்படி மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீ விபத்து காரணமாக சென்னை விமான நிலையத்தில் எந்த ஒரு விமான சேவையும் பாதிக்கப்படவில்லை. அனைத்து விமான சேவைகளும் சரியான நேரத்தில் சீராக இயங்கிக் கொண்டிருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.