கடப்பா கல் விழுந்து குழந்தை உயிரிழப்பு

கடப்பா கல் விழுந்து  குழந்தை உயிரிழப்பு

வாடகை வீட்டிற்கு வந்த மூன்றாவது நாளே, கடப்பா கல் விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட நதிசீலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வாஹித். இவருக்கு பவுசியா என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர், ஆம்பூரில் உள்ள ரபீக் நகர் பகுதியில் உள்ள மெக்கா மசூதிக்கு சொந்தமான வீட்டிற்கு வாஹித் குடும்பத்துடன் வாடகைக்கு குடி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு (ஜன.26) வாஹித் மனைவி பவுசியா குழந்தைகளுக்கு உணவு வாங்குவதற்காக, கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அவர்களது 4-வது குழந்தை ஹாபியா தஸ்கின் (3) வீட்டிற்கு வெளியே உள்ள கதவின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கேட் மீது வைக்கப்பட்டிருந்த கடப்பா கல், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஹாபியா தஸ்கின் தலையில் திடீரென விழுந்துள்ளது.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட குழந்தை ஹாபியா தஸ்கின் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அங்கேயே கீழே விழுந்தது. அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஹாபியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில், 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.