கரூர் விவகாரம்: வீடியோ ஆதாரங்கள் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை

கரூர் விவகாரம்: வீடியோ ஆதாரங்கள் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை

தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகிகள் 3 பேரிடம் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், ஏஎஸ்பி முகேஷ்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக நவம்பர் 3ஆம் தேதி, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பிரச்சார வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி, ஆதாரங்களை அடுத்து 3 நாட்களில் சமர்பிக்க உள்ளதாக தவெக மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என மொத்தம் 12 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை தவெக வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு, தவெக பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்ளிட்ட மூன்று பேர், கரூரில் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகளைச் சந்தித்தனர்.

அங்கு, வேலுச்சாமிபுரத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒளிப்பதிவுகள், ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், விஜயின் பிரச்சார வாகனத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவை அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

2வது நாளாக சிபிஐ விசாரணை:

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நேற்று (நவ.9) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தவெக வழக்கறிஞர் அரசு, பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்ளிட்ட மூன்று பேரிடம் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காலை 11 மணியளவில் கரூர் வந்த அவர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கூடுதல் ஆவணங்களை வழங்கினர். பின்னர், பிற்பகல் 3:30 மணிக்கு சிபிஐ அதிகாரிகளை சந்திக்கச் சென்ற மூவரும் இரவு 8.45க்கு வெளியே வந்தனர்.

இந்த விசாரணையில், கரூர் சம்பவத்தில் சதி நடைபெற்றதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவும், இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கு இருப்பதாகவும், தவெக தரப்பு ஒளிப்பதிவு செய்த அனைத்து வீடியோக்களையும் ஆதாரமாக காட்டி சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.