சென்னையில் தொடர் கனமழை - வெள்ளத்தில் தவழ்ந்த வாகனங்கள்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தொடர் மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடக்கு கிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், ஆலந்தூர், வண்டலூர், பெருங்களத்தூர், முடிச்சூர், சிட்லபாக்கம், சேலையூர், பள்ளிக்கரணை, கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதல் பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லக்கூடிய கண்டோன்மென்ட் சாலையில், முழங்கால் மேல் மூழ்கும் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்களை கீழே இறங்கி வாகனத்தை தள்ளியபடி நகர்ந்து செல்கின்றனர். மேலும், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல், குரோம்பேட்டை பழைய காவல் நிலையம் எதிரே மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும், வேளச்சேரி பிரதான சாலை, முடிச்சூர் சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெருங்களத்தூர் புத்தர் நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சில வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால், அங்கு வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
இதனையடுத்து, குடியிருப்பு பகுதிகள், ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை போன்ற இடங்களில் தேங்கி உள்ள மழை நீரை, மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார் உதவியுடன் வெளியேற்றி வருகின்றனர்.
இந்த சூழலில், தொடர்ந்து மழைக்காலம் எதிர்நோக்கி வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் கனமழை பெய்யும் நேரத்தில் வீடுகளை விட்டு அரசு முகாம்களிலோ அல்லது பாதுகாப்பு இடங்களிலோ தங்கிகொள்ள மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.