'SIR படிவத்தில் குழப்பம்... பொதுமக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம்' - துரை வைகோ

'SIR படிவத்தில் குழப்பம்... பொதுமக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம்' - துரை வைகோ

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் நடைமுறைபடுத்தும் விதத்தை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாக மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான துரை வைகோ, நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்தை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து துரை வைகோ பேசியதாவது, “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சமத்துவ நடை பயணத்தை வருகிற ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியில் துவங்கி திண்டுக்கல் வழியாக ஜனவரி 12 ஆம் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார். தமிழகத்தில் சாதி மோதல் இல்லாத சமத்துவம் உருவாக வேண்டும், மது மற்றும் போதை கலாச்சாரம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த பிரச்சாரத்தை அவர் மேற்கொள்கிறார்” என்றார்.

தொடர்ந்து, எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த 2002ஆம் ஆண்டு செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதனை நடைமுறைப்படுத்தும் முறையைதான் நாங்கள் எதிர்க்கிறோம். பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு பல குழப்பங்கள், நடைமுறை சிக்கல்கள் இருந்தது. இது இறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதில், அடுத்த 3 மாதங்களுக்கு கனமழை பெய்யும். இந்த நேரத்தில் இந்த வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தம் என்பது சிரமமான பணி. இதனை வருகிற ஜனவரி மாதத்திக்குள் முடிக்க வேண்டும் என்பது சாத்தியமற்றது. SIR படிவத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளது. இந்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றால் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை உள்ளது.

குறிப்பாக சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதற்கு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் எஸ்ஐஆர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே, இந்த குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் நோக்கத்தை நிறைவேற்ற முடியுமா? இவற்றை பார்ப்பதற்கு தகுதியான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கிற மாதிரியும், தகுதி இல்லாத வாக்காளர்கள் வாக்குரிமையை புகுத்துவது மாதிரியும் உள்ளது. ஏற்கனவே, இதுபோன்று பீகாரில் நடைபெற்றுள்ளது. ஹரியானவில் இதுபோன்ற குழப்பங்கள் நடைபெற்றுள்ளது. இதனை எதிர்த்து நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது புதியது கிடையாது. சமுதாயத்தில் நடைபெறும் சீர்கேடுகளுக்கு அரசையும், காவல்துறையும் சொல்லுவதை விட சமூகத்தையும் சொல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறை இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும். தமிழக அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் போதைப் பொருட்கள் நாடு முழுவதும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.