நடிகை சமந்தா 2-வது திருமணம்
பிரபல நடிகை சமந்தா இந்தி திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமொருவை இன்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நடிகை சமந்தா, ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார். ஈஷா லிங்க பைரவியில் ‘பூதசுத்தி விவாஹா’ முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பல்வேறு படங்களில் நடித்து, நான்கு ஃபிலிம்ஃபேர் உட்பட பல விருதுகளைப் பெற்ற நடிகை சமந்தா, ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பாணா காத்தாடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனைத் தொடர்ந்து, நீ தானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி, அஞ்சான், சீமராஜா, மெர்சல், சூப்பர் டீலக்ஸ், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் செய்து கொண்ட சமந்தா, 2021-ல் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா தசரகொத்தபள்ளி இணைந்து இயக்கிய 'தி ஃபேமிலி மேன் சீசன் 2’ வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த வெப் தொடர் மூலம் சமந்தா, ராஜ் நிடிமொரு இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். பின்னர் அதே கூட்டணியில் Citadel: Honey Bunny என்ற வெப் தொடரிலும் சமந்தா நடித்தார். மேலும் ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா தசரகொத்தபள்ளி கூட்டணி விஜய் சேதுபதி நடித்துள்ள ’ஃபர்சி’ தொடரையும் இயக்கியுள்ளனர்.
இதனிடையே கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சமந்தா, ராஜ் நிடிமொரு இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. கடந்தாண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜுடன் இருக்கும் புகைப்படங்கள் நடிகை சமந்தா பகிர்ந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியது.
இந்நிலையில், இன்று கோயம்புத்தூர், ஈஷா யோகா மையத்தில் லிங்க பைரவி கோயிலில் சமந்தா, ராஜ் நிடிமொரு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ஈஷா யோகா மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.