கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் நச்சு: ஆலை தற்காலிக மூடல்; 2 மூத்த மருந்து தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் - மா. சுப்பிரமணியன்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் நச்சு: ஆலை தற்காலிக மூடல்; 2 மூத்த மருந்து தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் - மா. சுப்பிரமணியன்

மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் பலியான சம்பவத்தில், தமிழகத்தில் உள்ள கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின் நிரந்தரமாக மூடப்படும்’ என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.கோல்ட்ரிப் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருத்துப்பொருள் தர ஆய்வாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தில் நச்சுப்பொருள் கலந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கோல்ட்ரிஃப் மருந்தை தயாரிக்கும் ஸ்ரெசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “ஏற்கனவே கோல்ட்ரிஃப் என்ற மருந்தில் தான் நச்சுத்தன்மை அதிகமாக கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்டோபர் 1-ம் தேதி மத்திய பிரதேசத்தில் அந்த சம்பவம் நடந்த உடனே அவர்கள் தமிழ்நாட்டுக்கு தகவல் சொன்னார்கள். தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து இதில் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடித்து உடனடியாக மத்திய பிரதேசத்துக்கும் ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும்,  ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் தகவல் கூறினோம். ஆனால், மத்திய பிரதேசமும் ஒன்றிய அரசும் இந்த மருந்தில் தவறு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், நாங்கள் தான் இந்த மருந்தில் நச்சுத்தன்மை எந்த அளவுக்கு கலப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டு உடனடியாக அக்டோபர் 3-ம் தேதியிலிருந்து அந்தத் தயாரிப்பை நிறுத்துவதற்கான ஆணையை பிறப்பித்தோம். அந்த நிறுவனத்தில் மருந்து தயாரிப்பதற்கு அனுமதி தரவில்லை. அனுமதி தராதது மட்டுமல்ல, அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை மூடுவதற்கும் உத்தரவிட்டோம். 10 நாள் கழித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதற்கு இடையில் நேற்று முன்தினம் அக்டோபர் 7-ம் தேதி அந்த நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை நோட்டீஸ் கொடுத்தோம் அந்த நோட்டீசை அவர் வாங்குவதற்கு ஆள் இல்லை. அதனால், நோட்டீசை அவர் வீட்டில் ஒட்டி விட்டார்கள்.

இப்போது நிறுவனத்தின் உரிமம்  தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கு இன்னும் 2- 3 நாட்களில் முடிவெடுத்து விடுவோம். இப்போது அந்த நிறுவனம் மூடப்பட்டு இருக்கிறது, மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், 2 மூத்த மருந்துப்பொருள் தர ஆய்வாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஏன் தொடர்ந்து சென்று இந்த மருந்து பொருட்களை ஆய்வு செய்யவில்லை என்று கேட்கப்பட்டு, சரியாக கண்காணிக்காத அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மருந்தில் ஒன்றிய அரசும் மத்திய பிரதேச அரசும் தவறு இல்லை என்று சொன்னார்கள். இருந்தாலும், தமிழ்நாடு அரசு இந்த மருந்தை தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. நடவடிக்கை எடுத்த காரணத்தினால் பல்வேறு மாநிலங்களில் நிகழ இருந்த அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை சரியாக கண்காணிக்காத 2 மூத்த மருத்துப் பொருள் தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.