எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை (டிச.2) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் 19ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. விடுமுறை நாட்கள் தவிர்த்து மொத்தம் 15 நாள்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு 10 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
முதல் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்களவையில் அரை மணி நேரத்துக்குள்ளாகவே எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். முதல் நாள் கூட்டத்தொடரில் நடைபெறுகிற விவாதங்களில் நேர்மறையான பங்கேற்பை அனைவரும் அளிக்க வேண்டும் என்றும், கருத்து வேறுபாடுகள் இருப்பது இயற்கையானது; ஆனால் அதை விவாதங்கள் மூலம் தீர்க்கலாம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா எடுத்துரைத்தார்.
மேலும் கோஷமிடவும், பதாகைகளை காட்டுவதற்குமான இடம் இதுவல்ல என்றும், அவர் கூறியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் 12 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அந்த நேரத்துக்குள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 ஆம் ஆண்டிற்கான துணை மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தார். மேலும் 3 மசோதாக்களையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி விதிக்கும் மசோதா, பான் மசாலா உற்பத்திக்கான புதிய வரி குறித்து அவர் விளக்கினார். இது தவிர மத்திய கலால் திருத்த மசோதா 2025, சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (2 ஆம் திருத்தம்) மசோதா 2025 ஆகியவற்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் மணிப்பூர் மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (2 ஆம் திருத்தம்) மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அமளியால் 2 மணிக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நாளை (டிச.2) காலை 11 மணி வரை அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
முன்னதாக, மக்களவை கூடியதும் சமீபத்தில் காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான காங்கிரஸ் எம்.பி சோனராம் சவுத்ரி, நடிகரும் முன்னாள் பாஜக எம்.பியுமான தர்மேந்திரா, பேராசிரியர் விஜய்குமார் மல்ஹோத்ரா, பிரகாஷ் ஜெய்ஸ்வால், ரவிகுமார் நாயக் ஆகிய 5 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த தலைவர்களின் சிறப்புகள் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய அணிகளின் சாதனைகளுக்காக அவை எழுந்து நின்று வாழ்த்தியது.
அமளிக்கு பிறகு நடைபெறும் மாநிலங்களவை
மாநிலங்களவை இன்று காலை தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடி நடைபெற்று வருகிறது.