காலையில் டீ, காபி குடிப்பதை நிறுத்துங்க! இந்த ஜூஸ் பளபளப்பான சருமம் முதல் செரிமானத்தை சீராக்கும்!

காலையில் டீ, காபி குடிப்பதை நிறுத்துங்க! இந்த ஜூஸ் பளபளப்பான சருமம் முதல் செரிமானத்தை சீராக்கும்!

காலை எழுந்ததும் டீ, காபி குடிக்கவில்லை என்றால் பலருக்கும் நாளே ஓடாது. இவை உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை கொடுப்பதன் விளைவு தான் பலரும் இவற்றை விரும்புவதற்கு காரணம். ஆனால், இது காலப்போக்கில் அசிடிட்டி, அல்சர் முதல் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்த்து அதனுடன் பல ஆரோக்கிய நன்மைகளை பெற காலையில் நெல்லிக்காய், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து செய்யும் ஜூஸ் பருகலாம்.

அத்தியாவசிய வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த ஜூஸ், உடலுக்கு இயற்கையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம், செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவுகிறது.

வெறும் வயிற்றில் இந்த ஊட்டச்சத்து நிறைந்த பானத்துடன் நாளை தொடங்குவது உடனடி ஆற்றலை வழங்குவதற்கு பதில் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. அந்த வகையில், தினசரி காலை இந்த ஜூஸ் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்ன? அதனை எப்படி செய்வது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்: நெல்லிக்காய், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து செய்யும் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையை கொண்டுள்ளது. நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. இது சரும ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது.

பீட்ரூட் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நைட்ரேட்டுகளை வழங்குகிறது. இது ரத்த ஓட்டம், ஹீமோகுளோபின் அளவு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கேரட் பீட்டா-கரோட்டீன் (வைட்டமின் A) வழங்குகிறது. இது பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்திற்கு முக்கியமானது.

நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களில் ஒன்றான வைட்டமின் சி நிரம்பியுள்ளது. பீட்ரூட் மற்றும் கேரட்டிலும் பீட்டா-கரோட்டீன், துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நெல்லிக்காயின் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் உயிரியல் கூறுகள் வீக்கத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்பு செல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

முதுமையை தடுக்கும்: நெல்லிக்காய் மற்றும் கேரட் ஆகியவை கொலாஜனை அதிகரிக்கும் கூறுகளைக் கொண்டிருப்பதால், அவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன மற்றும் முதுமை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

பீட்ரூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, சருமத்திற்கு இயற்கையான, ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது தெளிவான, பளபளப்பான மற்றும் இளமையான சருமத்தை தக்கவைக்க உதவுகிறது.

செரிமானம் மற்றும் நச்சு நீக்கம்: ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் செரிமானத்தை சரியாக்க பயன்படுகிறது. இது வயிற்று அமிலத்தை சமநிலைப்படுத்துகிறது மற்றும் வயிறு உப்புசம், அஜீரணம் ஆகியவற்றைத் தடுக்கிறது. பீட்ரூட் கல்லீரல் நச்சு நீக்கத்திற்கும் ரத்தத்தை சுத்தம் செய்வதற்கும் உதவுகிறது.

கேரட்டில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை உறுதிப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை வழங்குகிறது. இவை அனைத்தும் ஒன்றாக, செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் முழுமையான இரைப்பை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.

ரத்த ஆரோக்கியம்: பீட்ரூட் மற்றும் கேரட்டில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் நிரம்பியுள்ளது. இவை இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு முக்கியமானவை. நெல்லிக்காய் இரும்புச் சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது ரத்த சோகை மற்றும் சோர்வுக்கு சரியான தீர்வாக அமைகிறது. இதை தினமும் உட்கொள்வது ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது, சோர்வைக் குறைக்கிறது மற்றும் ஆற்றல் அளவை உயர்த்துகிறது.

எடை மேலாண்மை மற்றும் வளர்சிதை மாற்றம்: குறைந்த கலோரிகள் ஆனால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ஜூஸ், வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தையும் கொழுப்பை எரிப்பதையும் ஊக்குவிக்கிறது. இந்த ஜூஸை சீரான வாழ்க்கை முறையுடன் தவறாமல் எடுத்துக்கொள்வது, எடை குறைப்பு, ரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்துதல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பீட்ரூட் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தினமும் உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது. பீட்ரூட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய பாதுகாப்புக்கு உதவுகிறது.