வேலூர்: தவறான சிகிச்சை அளித்ததால் பழ வியாபாரி மரணம்?

வேலூர்: தவறான சிகிச்சை அளித்ததால் பழ வியாபாரி மரணம்?

ஒடுகத்தூரில் தவறான சிகிச்சை அளித்ததால் பழ வியாபாரி உயிரிழந்ததாக கூறி, தனியார் கிளினிக்கை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வமணி–சாந்தி தம்பதி. இவர்களது மூன்றாவது மகன் சீனிவாசன் (27). பழ வியாபாரி. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உறவினரின் மகள் நிவேதா (21) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி சீனிவாசனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது அண்ணனுடன் ஒடுகத்தூரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்கு சென்றார். அங்கு மருத்துவர் இல்லாத நிலையில், கிளினிக்கில் இருந்த நபர் சீனிவாசனுக்கு இரண்டு ஊசிகள் போட்டு மாத்திரைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சீனிவாசனின் உடல்நிலை திடீரென மோசமடைந்து மயங்கி விழுந்தார்.

சீனிவாசன் (கோப்புப்படம்)
சீனிவாசன் (கோப்புப்படம்) 

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், குடும்பத்தினர் அவரை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.20) சீனிவாசன் உயிரிழந்தார்.

இந்நிலையில், சீனிவாசனின் மரணத்திற்கு ஒடுகத்தூரில் உள்ள தனியார் கிளினிக்கில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி, அவரது உறவினர்கள் நேற்று அந்த கிளினிக்கை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே, சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட சீனிவாசனின் சடலத்தை உறவினர்களும், பொதுமக்களும் பாதி வழியில் தடுத்து நிறுத்தியதால், வேலூருக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், முற்றுகை நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட தனியார் கிளினிக்கின் உரிமையாளர்கள் கிளினிக்கை மூடிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து, போலீசார் சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மனைவி நிவேதா தனது 5 மாத கைக்குழந்தையுடன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தப்பியோடி தலைமறைவாக உள்ள கிளினிக் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.