“இனி நான் என்ன செய்வேன்?” - எஸ்ஐஆர் பணி அழுத்தத்தால் அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு! கதறும் கணவர்

“இனி நான் என்ன செய்வேன்?” - எஸ்ஐஆர் பணி அழுத்தத்தால் அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு! கதறும் கணவர்

எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுவந்த சிவானார்தாங்கல் கிராம உதவியாளர் பணி அழுத்தத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் கடந்த 4 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி வருகிற டிசம்பர் 4 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று SIR படிவங்களை கொடுத்து வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு எஸ்ஐஆர் பணிகளில் வாக்காளர்களை தேடிச்சென்று விண்ணப்ப படிவம் வழங்குவது சிரமாக இருப்பதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் (BLO) தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் விளைவாக, எஸ்ஐஆர் பணிகளை அவசரகதியில் மேற்கொள்ள நிர்பந்தம் செய்வதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால், எஸ்ஐஆர் புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வந்த கிராம பெண் உதவியாளர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராம பெண் உதவியாளர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள சிவனார்தாங்கல் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் ஜாஹிதா பேகம் (38). இவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், ஜாஹிதா பேகம் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீசார், உயிரிழந்த ஜாஹிதா பேகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார், ‘மன உளைச்சலால் தற்கொலை’ என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்ஐஆர் பணியால் மன உளைச்சல்

முன்னதாக, ஜாஹிதா பேகம், எஸ்ஐஆர் பணி மேற்கொண்ட சிவனார்தாங்கல் கிராமத்தில் 90 படிவங்கள் மட்டுமே கொடுத்து பெற்றுள்ளதாக, திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேகம் தன்னுடன் பணியாற்றும் சக கிராம உதவியாளரை தொடர்புகொண்டு, தன்னை திமுக நிர்வாகிகள், அதிகாரிகள் திட்டுவதாக கூறியுள்ளார். பின்னர் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து ஜாஹிதா பேகத்தின் கணவர் கூறுகையில், “நேற்று எஸ்ஐஆர் படிவங்களை எடுத்துக்கொண்டு பேகத்தை நான் அழைத்துச் சென்றேன். இதில், 30 படிவங்களை பூர்த்தி செய்து அவர் கொடுத்துவிட்டார். இதற்கிடையில், இணையதள சேவை சரியாக இல்லாததால் 60 விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. நெட் சென்டர் சென்று பார்த்தபோது அங்கே ஸ்கேன் செய்ய முடியாது என தெரிவித்தனர். இதனால், வீட்டிற்கு வந்து ஏழு படிவங்களை பதிவேற்றம் செய்தார்.

அதன் பின்னர் என்னை கடைக்குச் சென்று வருமாறு கூறினார். நானும் கடைக்குச் சென்றேன். ஆனால், அரை மணிநேரத்தில் என் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக எனக்கு தகவல் வந்தது. நான் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு காரணம் மத்திய அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம்தான். என் மனைவி எங்களை விட்டு சென்றுவிட்டார். எனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன். எங்களுக்கு யார் என்ன உதவி செய்வார்?” என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.