சூப்பர் ஃபுட் பட்டியலில் A2 நெய்! நாட்டு மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியமானதா?

சூப்பர் ஃபுட் பட்டியலில் A2 நெய்! நாட்டு மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியமானதா?

நெய்! வெண் பொங்கல் முதல் பிரியாணி வரை மணத்தையும் ருசியையும் ஒருபடி கூட்டிக்கொடுக்கும் ஒரு சுவையான பொருள். சமையலில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். பல தலைமுறைகளாக, இந்திய உணவுப் பாரம்பரியத்தில் நெய்க்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல், ஆயுர்வேதத்தில் மருந்தாகவும், ஆரோக்கியத்தின் ஆதாரமாகவும் இது கருதப்படுகிறது.

நம் தாத்தா-பாட்டி காலத்தில், மாட்டின் பால், அதன் இனம் பற்றிய விவாதம் எல்லாம் கிடையாது. நெய் என்றால், அது நாட்டு மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சுத்தமான, மருத்துவ குணம் கொண்ட ஒரு பொருள் அவ்வளவு தான். ஆனால், இன்றைய நவீன உணவு உலகில், "A2 நெய்" என்ற சொல் பிரபலமடைந்துள்ளது.

அது மட்டுமல்லாமல், சாதாரண உள்ளூர் நெய்யுடன் ஒப்பிடும்போது இது ஏன் சிறந்தது என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. சாதரணாமாக நாம் பயன்படுத்தும் நெய் ஒரு கிலோ 1000 ரூபாயிற்கு விற்கப்பட்டால், A2 நெய் 3 ஆயிரம் ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சந்தையில், வழக்கமான நெய்யை விட அதிக விலைக்கும், ஆரோக்கியம் சார்ந்த பலன்களுக்கும் ஏ2 நெய் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, A2 நெய் என்றால் என்ன? இத்தனை ஆண்டுகளாக நாம் சாப்பிட்ட நெய்யை விட இதில் இருக்கும் நன்மைகள் என்ன? இது எவ்வாறு வேறுபடுகிறது? போன்ற சந்தேகங்களை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஏ2 நெய் என்றால் என்ன?

A2 நெய்க்கும் வழக்கமான நெய்க்கும் உள்ள முக்கிய வேறுபாடு, அதை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பால் வகைகளில் தான் உள்ளது. A2 நெய், கிர், சாஹிவால் மற்றும் ரதி போன்ற பூர்வீக இந்திய நாட்டு மாடுகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பசுக்களின் பாலில் A2 பீட்டா-கேசின் (Beta-Casein) புரதம் மட்டுமே உள்ளது என A2 milk consumption and its health benefits: an update என்ற தலைப்பில் வெளியான NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது.கோப்புப்படம் (Getty Images)

இதற்கு நேர்மாறாக, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வணிக ரீதியாகக் கிடைக்கும் பெரும்பாலான நெய், ஜெர்சி அல்லது ஹோல்ஸ்டீன் போன்ற கலப்பின அல்லது மேற்கத்திய இனங்களிலிருந்து வருகிறது. இதில் A1 பீட்டா-கேசின் உள்ளது. இது சில ஆராய்ச்சியாளர்கள் அழற்சி மற்றும் தன்னுடல் தாக்க பிரச்சனைகளுடன் தொடர்புடைய ஒரு புரதமாகும் என்கின்றனர்.

தயாரிக்கப்படும் முறை : A2 வகை நெய், பிலோனா (Bilona) முறையில் தயாரிக்கப்படுகிறது. பிலோனா முறை என்பது தயிரில் இருந்து நெய் தயாரிக்கும் ஒரு பழமையான, ஆயுர்வேத பாரம்பரிய முறையாகும். இதில் தயிரை மரக்கலவையால் (பிலோனா) கைமுறையாகக் கடைந்து வெண்ணெயைப் பிரித்து, பின்னர் அந்தக் வெண்ணெயை மெதுவாகக் காய்ச்சி நெய் தயாரிக்கப்படுகிறது, இதனால் ஊட்டச்சத்துக்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த பாரம்பரிய முறை நெய்யின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், CLA (Conjugated Linoleic Acid), மற்றும் வைட்டமின் A, D, E, K போன்றவற்றை தக்கவைத்து, செரிமான மண்டலத்தை வலுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்துதல் போன்ற பல கூடுதல் நன்மைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

A2 நெய் நன்மைகள்:

  • ஜீரணிக்க எளிதானது: A2 நெய்யில் A2 பீட்டா-கேசீன் புரதம் இருப்பதால், வழக்கமான நெய்யை விட ஜீரணிக்க எளிதானது என்று கருதப்படுகிறது. இது பால் பொருட்களுக்கு சகிப்புத்தன்மை அல்லது உணர்திறன் உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
  • கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்தவை: A2 நெய் கொழுப்பில் கரையக்கூடிய (fat-soluble vitamins) வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றின் வளமான மூலமாகும். இவை நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அவசியமானவை. இந்த வைட்டமின்கள் ஆரோக்கியமான தோல், எலும்புகள் மற்றும் கண்பார்வையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • லினோலிக் அமிலம் (CLA): A2 நெய்யில் Conjugated Linoleic Acid உள்ளது. இது எடை மேலாண்மை மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. CLA அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • சாத்தியமான அழற்சி எதிர்ப்பு விளைவுகள்: A2 நெய் அதன் CLA மற்றும் பிற ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணமாக அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருக்கலாம். இது நாள்பட்ட வீக்கம் அல்லது தன்னுடல் தாக்கக் கோளாறுகள் உள்ள நபர்களுக்கு ஏற்ற தேர்வாகும்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI), A1 மற்றும் A2 என்ற பெயரிடலுடன் பால், நெய், வெண்ணெய் விற்பதை தடை செய்தது. அதுமட்டுமல்லாமல், ஏ2 என்ற பெயரில் நெய் விற்பது தவறான தகவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியது. ஆனால், ஒரு வாரத்துக்குள் FSSAI தனது அறிவுறுத்தலை திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.