சீதாப்பழம் ரொம்ப பிடிக்குமா? இந்த பிரச்சனை இருந்தா இனி தொடாதீங்க!

சீதாப்பழம் ரொம்ப பிடிக்குமா? இந்த பிரச்சனை இருந்தா இனி தொடாதீங்க!

இயற்கையான இனிப்புச் சுவை, கிரீமியான சதைப்பகுதி, மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீதாப்பழம் பலரின் விருப்பமான பழமாகும். இதன் சீசனுக்காக காத்திருந்து வாங்கி ஆசையாக வாங்கி ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் அதிகம். இவை, ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று அறியப்பட்டாலும், எந்த ஒரு உணவைப் போலவே இதையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சில எதிர்பாராத பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக, அதன் அதிக கலோரி, நார்ச்சத்து மற்றும் சில இயற்கை கலவைகள் (Annonacin) காரணமாக, சீதாப்பழத்தை மிதமாகவே சாப்பிட வேண்டும். மேலும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்வதற்கு முன் கண்டிப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சீதாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்துகள் மற்றும் அதைத் தவிர்க்க வேண்டியவர்கள் யார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வாமை எதிர்வினைகள்: பொதுவாகச் சீதாப்பழம் பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு இதைச் சாப்பிட்ட பிறகு அரிப்பு, தடிப்புகள் அல்லது வீக்கம் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம். இந்தக் அறிகுறிகள் பெரும்பாலும் சில பழ என்சைம்களால் உணர்திறன் கொண்ட நபர்களிடம் ஏற்படுகின்றன. இதைச் சாப்பிட்ட பிறகு அசௌகரியமாக உணர்ந்தால், கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தடுக்க அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

செரிமானப் பிரச்சனை: சீதாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இருப்பினும், அதிகப்படியான நார்ச்சத்து உட்கொள்வது வயிறு உப்புசம், வாயு அல்லது வயிற்றுப்போக்குக்கு கூட வழிவகுக்கும் என NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் அதிக அளவில் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கி, வயிற்று வலியை ஏற்படுத்தும். சீதா பழத்தின் முழுமையான நன்மைகளை பெற குறைந்த அளவில் சாப்பிடுவது சிறந்தது.

விதைகளில் ஆபத்து: பழத்தின் சதைப்பகுதி பாதுகாப்பானது மற்றும் ஊட்டமளிக்கும் என்றாலும், அதன் விதைகள் நச்சுத்தன்மை கொண்டவை மற்றும் ஒருபோதும் உட்கொள்ளப்படக் கூடாது. விதைகளை மென்று அல்லது விழுங்கினால், அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விஷமாக மாறி வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும்.

குமட்டல் மற்றும் வயிற்று அசௌகரியம்: சீதாப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது, இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், அதிகப்படியான இரும்புச்சத்து, குறிப்பாக உணர்திறன் வாய்ந்த செரிமான அமைப்பு கொண்டவர்களுக்கு, குமட்டல், மலச்சிக்கல் அல்லது வயிற்று வலிக்கு வழிவகுக்கும். பக்க விளைவுகளைத் தடுக்க, அளவைக் கட்டுப்படுத்துவது உதவும்.

ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு ஆரோக்கியத்தில் தாக்கம்: இந்த பழத்தில் அன்னோனாசின் (annonacin) எனப்படும் ஒரு இயற்கையான கலவை உள்ளது. இது அதிகப்படியாக உட்கொள்ளப்படும்போது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம். உயர் ரத்த அழுத்தம் அல்லது நரம்பியல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, அதிகச் சீதாப்பழம் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தில் திடீர் சரிவு, தலைச்சுற்றல் அல்லது கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

வெப்பநிலை குறைவு: சீதாப்பழம் குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம். குளிர் காலங்களில், இது சளி அல்லது இருமல் பிடிக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். இதைச் சிறிய அளவில் சாப்பிடுவது அல்லது சூடான உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடுவது அதன் குளிரூட்டும் விளைவுகளை சமப்படுத்த உதவும்.

எடை அதிகரிப்பு: சீதாப்பழம் இயற்கையாகவே இனிமையானது என்றாலும், இதில் அதிக கலோரிகள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிடுவது, குறிப்பாக நீங்கள் உடல் செயல்பாடு மூலம் கலோரிகளை எரிக்காவிட்டால், எடை அதிகரிக்கக் காரணமாக அமையலாம். எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புவோர் இதை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

கர்ப்பிணிப் பெண்கள் சீதாப்பழத்தை உணவில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதேபோல், நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலைக் கண்காணிக்க வேண்டும், ஏனெனில் பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யலாம் என Tab health தளத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கர்ப்ப காலத்தில் விதைகளைத் தற்செயலாக விழுங்குவது தீங்கு விளைவிக்கும் என்பதால், கவனத்துடன் உட்கொள்வது அவசியம்.