இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு தர வேண்டும் - அஸ்வின்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 18 ஆம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "தற்போதுள்ள இந்திய அணியில் பந்து வீச்சாளர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனாலும் இதில் பிரஷித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணாவுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை. அதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட வேண்டும். அவர் ஏற்கனவே தனது திறமையை வெளிப்படுத்திவிட்டார்.
இருந்த போதிலும், அவர் தற்போது வரையில் அணியில் இடம் பெற போராடி வருகிறார். நான் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவளிப்பதற்கான காரணம், அவர் ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் சிறப்பாக செயல்படுகிறார் என்பதால் தான். அவருக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்பட வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர்" என்றுகூறியுள்ளார்.
அஸ்வின் கூறுவது போல் நியூசிலாந்துக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியிலாவது அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அணிக்காக இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒருநாள் அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.