வெகு சிறப்பாக நடைபெற்ற யானை பொங்கல் விழா - உற்சாகமாக பங்கேற்ற சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பங்கேற்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கும் உதவியாக இருக்கும் இந்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அங்கு யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்பதற்காக யானைகள் குளிப்பாட்டப்பட்டு கொண்டுவரப்பட்டன. அவைகளுக்கு பொட்டு வைத்து, மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பிறகு யானைகள் அனைத்தும் அங்குள்ள விநாயகரை துதிக்கையை தூக்கி மண்டியிட்டு வணங்கியது. அதன்பிறகு பழங்குடியின மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது.
இந்த பொங்கல் விழா குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் தான் கொண்டாடுவோம். ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக யானை பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பது புது அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இங்கு ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகளை பார்க்க முடிந்தது” என்றனர்.
முன்பு டாப்சிலிப் மத்தியில் உள்ள புல்வெளி பகுதியில்தான் யானை பொங்கல் வழக்கமாக கொண்டாடப்பட்டு வந்தது. அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் நிறையப்பேர் யானை பொங்கலை கண்டு ரசிப்பதுண்டு. ஆனால் கொரோனாவிற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக டாப்சிலிப் பகுதியை அடுத்து அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியான கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இந்த பொங்கலானது கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனால் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே அங்கு வந்து யானை பொங்கல் விழாவில் பங்கேற்க முடிகிறது. யானை பொங்கலை காணவேண்டுமென டாப்சிலிப் வருகிறவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்படுவதாக சுற்றுலாப் பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். எனவே வழக்கமாக கொண்டாடும் டாப்சிலிப் பகுதியில் அடுத்த ஆண்டு யானை பொங்கலை கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.