ஓபிஎஸ் இல்லாமலே கூட்டணி பலமாக தான் உள்ளது - நயினார் நாகேந்திரன்
ஓபிஎஸ் இல்லாமலே தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக தான் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், ஆட்சியை பிடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாய் சுழன்று வருகின்றன. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சாரம் ஒருபக்கம் இருந்தாலும் தேர்தல் வெற்றிக்கு கூட்டணியின் ஆதரவும் அடிப்படை என்ற சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அந்த வகையில், சமீபத்தில், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. மேலும், தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணியை இணைப்பது தொடர்பாக விரைவில் பதில் கிடைக்கும் எனவும், ஓபிஎஸ்-யை இணைப்பது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காதது குறித்தும், மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? ஒருவேளை இணைந்தால் அது என்டிஏ-வுக்கு இன்னும் பலமாகுமா? எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இப்போதே தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாகத்தான் உள்ளது” என பதிலளித்தார்.
அப்படியானால், ஓபிஎஸ் கூட்டணிக்கு வருவதில் உங்களுக்கு பிரச்சனை இல்லை என எடுத்துக் கொள்ளலாமா? என கேட்ட போது, அப்படியெல்லாம் எடுத்து கொள்ளக் கூடாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாகிக் கொண்டே வருகிறது. நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்ற அவர், தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்தது தொடர்பான கேள்வியை புறக்கணித்து சென்றார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்து நயினார் நாகேந்திரன் நலம் விசாரித்தார். பதிலுக்கு அவரும் நலம் விசாரித்து புறப்பட்டுச் சென்றார்.