“2026 தேர்தலில் நான் போட்டியிடவில்லை!” - சரத்குமார் தகவல்

“2026 தேர்தலில் நான் போட்டியிடவில்லை!” - சரத்குமார் தகவல்

என் பின்னால் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை” என நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ‘கொம்புசீவி’ திரைப்பட குழுவினர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் அருட்தந்தை காட்வின் ரூபஸ் தலைமை வகித்தார். அதிபர் அருட்தந்தை இன்னாசிமுத்து ஆசியுரை வழங்கினார். மாணவர் மன்ற தலைவர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார்.

செயலர் எல்.லாசர் மற்றும் துணை முதல்வர் லூர்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன், நடிகர் சரத்குமார் திரைப்படத்தின் இயக்குநர் பொன்ராம், தயாரிப்பாளர் முகேஷ் டி.செல்லையா உள்ளிட்ட திரைப்பட குழுவினர் பங்கேற்றனர்.

கல்லூரி வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக அனுபவியுங்கள். இந்த வாழ்க்கையை முடித்துவிட்டு வேலைக்கு போகும்போது இந்த வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்றால் வருத்தப்படுவோம். நல்ல படிப்பை முடித்து ஒரு டிகிரி பெற வேண்டும். நல்ல நண்பர்கள் கல்லூரியில்தான் அதிகம் கிடைப்பார்கள். அவர்களை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். ‘கொம்புசீவி’ திரைப்படத்தை நண்பர்களோடு சேர்ந்து திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு உங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மாணவர் புல தலைவர் ஆரோக்கியதாஸ், மாணவியர் புலத் தலைவி ஷமிலா ஜோஸ்டர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரோஷிலோ ஜோசப் மற்றும் சிவ சந்தோஷ் தொகுத்து வழங்கினர். பேராசிரியர் டேனியல் நன்றி கூறினார்.

தேர்தலில் போட்டியில்லை: தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார், “என் பின்னால் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “விஜய்யை விட பெரிய அரசியல் கட்சியினர் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிக்க தயாராக உள்ளேன்” என விஜய் குறித்த கேள்விகளை தவிர்த்தார்.