தவெக தலைவர் விஜயை சீண்டிய 'கூல்' சுரேஷ்... திரைப்பட விழாவில் சுவாரஸ்யம்

தவெக தலைவர் விஜயை சீண்டிய 'கூல்' சுரேஷ்... திரைப்பட விழாவில் சுவாரஸ்யம்

பல்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கூல் சுரேஷ், தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்ச்சித்துள்ளார்.

மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த பல்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. நிகழ்வில் மாஸ்டர் மகேந்திரன், தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் கூல் சுரேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது கூல் சுரேஷ் மேடையில் பேசுகையில், "நான் காக்க காக்க திரைப்படம் நடிக்கும் போது சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அதே அர்ப்பணிப்பு மாஸ்டர் மகேந்திரனிடம் இருக்கிறது. இன்றைய நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் தயாரிப்பாளர் செலவில் பல்வேறு விதமான உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். இருப்பினும் மகேந்திரன் உணவு கட்டுப்பாடு கொண்டவர்.

பெண்கள் விஷயத்தில் நான் அப்படி இப்படி என்ன பலரும் பேசுவார்கள். இருப்பினும் நான் எப்படிப்பட்டவன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னுடன் இருந்த அர்ச்சனாவிற்கு நன்கு தெரியும்" என்றார்.

நடிகர் கூல் சுரேஷ்

மேலும் பேசிய கூல் சுரேஷ், "விஜய் அவர் மேடையில் பேசியதை வைத்து நான் பேசி இருப்பதை ஏதாவது ஒன்றை பத்திரிக்கையாளர்கள் எழுதுங்கள். எந்த பிரச்சனை வந்தாலும், எங்களுடைய தயாரிப்பாளரும் இயக்குநரும் பார்த்துக் கொள்வார்கள். என்னை ஏதுவும் செய்ய வேண்டாம். நான் ஒரு அப்பாவி" என தெரிவித்தார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன்

தொடர்ந்து, தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், "கூல் சுரேஷ் மேடையில் பேசும் போது, கைதட்டுவதற்கே 10 பேரை வரவைத்து விடுவார். அப்போது தான் நிகழ்ச்சி கலகலப்பாகும். மேலும், பெரிய திரைப்படங்களை நன்றாக வரவில்லை என்றால் அது சிறிய படமாகி போகும். சிறிய திரைப்படமான இந்த பல்ஸ் படத்தை இயக்குநர் நன்றாக எடுத்து இருக்கிறார். அந்த வகையில் இது பெரிய திரைப்படமாக மாறும். குட் நைட், டாடா போன்று வருடத்தில் 15 சின்ன படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. பல பெரிய திரைப்படங்கள் தோல்வி அடைந்துள்ளன" என்றார்.

மேலும், மாஸ்டர் மகேந்திரன் மேடையில் பேசிய போது,"கூல் சுரேஷை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என படத்தின் பெயரை கத்தி கத்தி கூறி அதற்காக விளம்பரம் செய்யக் கூடியவர். அவர் இந்த படத்தில் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முதல் நாள் என்னை பார்த்து சொன்னது நிச்சயமாக படத்தினை நல்லபடியாக முடித்து அதற்கு உரிய திரையரங்குகளை பெற்று திரையிடுவேன். அதனை தற்போது நிறைவேற்றி இருக்கிறார். அதே போல பொதுவாகவே நடிகர் நடிகைகள் மிகப் பெரிய உச்ச நட்சத்திரம் படவிழாக்களுக்கும் செல்லுங்கள். ஏனெனில் நீங்கள் நடிக்கவில்லை என்றால் கூட அந்த படத்தின் விளம்பர விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டால், அந்த மேடையை பலரும் உற்று நோக்குவார்கள். அதன் மூலம் அந்த படத்திற்கான விளம்பரம் அதிகரிக்கக்கூடும்" என்றார்.