5 ரூபாய்க்கு பரோட்டா: மதுரை ரசிகருக்கு தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்த ரஜினிகாந்த்
ரூ.5க்கு பரோட்டா விற்பனை செய்துவரும் தனது தீவிர ரசிகரை குடும்பத்துடன் நேரில் வரவழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார்.
மதுரை வண்டியூர் பகுதியில் அல்போன்ஸ் என்பவர் ‘மாந்தோப்பு பரோட்டா கடை’ என்ற பெயரில் ரூ.5க்கு பரோட்டா விற்பனை செய்து வருகிறார். தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும்போல, 5 ரூபாய்க்கே பரோட்டா விற்பனை செய்து வருகிறார். ரஜினியின் தீவிர ரசிகரான அல்போன்ஸ், தன்னுடைய கடையின் பெயர் பலகையில் ரஜினியின் படத்தையும் வரைந்து வைத்துள்ளார். அல்போன்ஸின் இந்த உணவு சேவை குறித்து அண்மையில் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தன்னுடைய ரசிகரின் இந்த உணவு சேவையை அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அல்போன்ஸை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும் தன்னை சந்திக்க குடும்பத்துடன் வருகை தருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். ரஜினியின் அழைப்பை ஏற்று, அல்போன்ஸ் நேற்று (ஜன 25) தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றிருந்தார். அப்போது அல்போன்ஸிற்கு ரஜினி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது அல்போன்ஸ்க்கு நடிகர் ரஜினி தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.
அதனைத்தொடர்ந்து அல்போன்ஸின் குடும்பத்தார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அல்போன்ஸின் குழந்தையை ரஜினி தூக்கி வைத்து கொஞ்சுவது மற்றும் அவரது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
நடிகர் ரஜினியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து பேசிய அல்போன்ஸ், “ரஜின்காந்தை சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. ஆனால் அவரே எனது சேவையை பாராட்டி என்னை அழைத்து கௌரவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கொடுத்துள்ள இந்த ஊக்கத்தால் எனது உணவு சேவையை மேலும் பல ஆண்டு காலம் தொடர்ந்து செய்வேன் என்ற நம்பிக்கை எனக்குள் வந்திருக்கிறது” என்றார்.