களம்காவல் விமர்சனம்: மம்மூட்டியின் மிரட்டலும், விநாயகனின் ஹீரோயிசமும்!

களம்காவல் விமர்சனம்: மம்மூட்டியின் மிரட்டலும், விநாயகனின் ஹீரோயிசமும்!

கர்நாடக மாநிலத்தை உலுக்கிய சீரியல் கொலையாளி சயனைடு மோகனை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 20 பெண்களை கொலை செய்த அவனின் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார் என்ற எதிர்பார்ப்பே இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தை பெரிதும் அதிகப்படுத்தியது.

அதிலும் மம்மூட்டி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றாலே இயல்பாகவே அப்படத்துக்கு ஒருவித ஹைப் உருவாகிவிடும். இத்தனை எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘களம்காவல்’ படம் எப்படி இருக்கிறது?

படத்தின் தொடக்கத்தில் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு வெளியே செல்லும் ஸ்டான்லி தாஸ் (மம்மூட்டி) ஹோட்டலில் ரூம் எடுத்து இன்னொரு பெண்ணுடன் தங்குகிறார். டிவியில் கொலை செய்தி ஒன்றைப் பார்க்கும் அந்தப் பெண் அது குறித்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொல்கிறார் ஸ்டான்லி.

இப்படியான மிரள வைக்கும் அறிமுகத்துடன் தொடங்கும் படம், ‘சைக்கோ’ கொலையாளியான ஸ்டான்லியை தேடும் போலீஸ் அதிகாரி ஜெயகிருஷ்ணன் (விநாயகன்) பக்கம் திரும்புகிறது. இந்த இருவருக்கும் இடையிலான கேட் அண்ட் மவுஸ் கேம் தான் மீதிப் படம்.

சீரியல் கில்லர் vs அவரை துரத்தும் போலீஸ் அதிகாரி என்ற கதைக்களத்தில் ஏராளமான வெப் தொடர்களும், திரைப்படங்களும் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. இதே சயனைடு மோகனின் கதையை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2023-ல் ‘தாஹத்’ என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதையை எழுதி ஓர் அட்டகாசமான த்ரில்லர் விருந்தை பார்வையாளர்களுக்கு வழங்கி இருக்கிறார் இயக்குநர் ஜிதின் கே.ஜோஸ்.

கொலைகாரனை ஒரு ஹீரோவாக சித்தரிக்காமல், அவனுடைய செயலை நியாயப்படுத்தும் ‘நெஞ்சை நக்கும்’ பின்புலம் என ஜல்லியடிக்காமல், அவன் ஒரு குற்றவாளி என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

படத்தின் மிக முக்கியமான பலமே அதன் இரண்டு முன்னணி நடிகர்கள்தான். வில்லன் மம்மூட்டியின் நடிப்பு இந்தத் படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

ஸ்டான்லி தாஸ் என்ற சீரியல் கொலையாளி கதாபாத்திரத்தில், எந்தவித அதீத நடிப்பையும் வெளிப்படுத்தாமல், தன் முக பாவனைகளிலேயே பயமுறுத்துகிறார். வீட்டில் ஒரு சராசரி மனிதர் போலக் காட்சியளித்துவிட்டு, அடுத்த நிமிடமே இரக்கமற்ற கொலையாளியாக மாறும் காட்சிகளில் நிஜமாகவே மிரட்டி இருக்கிறார்.

படத்தின் ஹீரோ விநாயகன். அமைதியாக, கட்டுப்பாடான உடல்மொழியுடன், ஒரு குறிக்கோளுடன் இயங்கும் போலீஸ் அதிகாரியாக மிளிர்கிறார். வழக்கமான கதாநாயக போலீஸ் அதிகாரிக்கான அலட்டல், நீண்ட வசனங்கள் என ஏதும் இல்லாமல், மிகவும் யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். ரஜிஷா விஜயன் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பு.

படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியில் வரும் விசாரணை காட்சிகள்தான். ஒரே மாதிரியான விசாரணை காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் விநாயகன் தன் விசாரணையில் ஏராளமான பெண்களைப் பற்றி பேசுவது கடும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்ற தெளிவு காட்சிகளில் இல்லை.

சில இடங்களில் தொய்வு இருந்தாலும், மலையாள சினிமாவின் முக்கியமான த்ரில்லர் படங்களில் ஒன்றாக இதனை நிச்சயம் சொல்லலாம்.

மம்மூட்டி மற்றும் விநாயகனின் அபார நடிப்பும், காட்சியமைப்புகளும் குறைகளை மறக்கடிக்கின்றன. அழுத்தமான, உளவியல் சார்ந்த திரைப்படங்களை விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.