35 மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகள் திருட்டு - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

35 மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகள் திருட்டு - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் மாற்றிகளை உடைத்து தாமிரக் கம்பிகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) உடைக்கப்பட்டு அதன் உள்ளே உள்ள பொருட்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாலாஜாபாத், படப்பை, உத்திரமேரூர் சுற்று வட்டார கிராமங்களில் 35-க்கு மேற்பட்ட இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

நள்ளிரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய நிலங்களை குறி வைக்கும் இந்த கும்பல் டிரான்ஸ்பார்மர்களைத் திறமையாகக் கையாண்டு அதிலுள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தாமிர கம்பிகள் மற்றும் விலையுயர்ந்த மின்மாற்றி எண்ணெய்யைத் திருடிச் செல்கின்றனர்.

இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் அந்த பகுதிகளில் விவசாய பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்களை மீண்டும் சீரமைக்க அல்லது புதியவற்றை நிறுவ மின்வாரியத்திற்கு பல நாட்களாவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து அதிக புகார்கள் குவிந்ததை அடுத்து மாவட்ட காவல் துறை தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே பழைய இரும்பு வியாபாரிகள் மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கிராமப்புறங்களில் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதி விவசாயி முருகேசன் கூறுகையில், ''கடந்த சில மாதங்களாக 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) உடைக்கப்பட்டு திருடப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. டிரான்ஸ்பார்மர்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வருவதால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இதனால் பயிர்களுக்கும் நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றோம். சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்க கூடுதல் நாட்களாவதால் விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.