போனில் அழகிய இளம்பெண்.! ஆண்களை கட்டிப்போட்டு ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 9 பேர் கைது
ஆண்களிடம் செல்போன் மூலம் இளம்பெண்ணை பழக வைத்து, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் அலமேலு (25). திருமணமான இவருக்கு ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிபட்டியை சேர்ந்த சகோதரர்களான ஜனார்த்தனன் (28) மற்றும் ஜனஅம்சபிரியன் (28) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டி, ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கிய நபர்களின் செல்போன் எண்களை திரட்டியுள்ளனர். அவர்களிடம் செல்போன் மூலம் அலமேலுவை பேசி பழக வைத்துள்ளனர்.
அந்த நபர்கள் நன்றாக பேசி பழகுவதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அலமேலு மூலம் பணம் பெற்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் பணத்தை திரும்பி கேட்கும் போது அதை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அலமேலுவின் பேச்சை நம்பி அவர்கள் நேரில் வரும் போது, அவர்களை வீட்டின் உள்ளே வரவழைத்து கட்டிப்போட்டு ஆடைகளை களைந்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோக்களை வைத்து லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதுடன், பணம் தராவிட்டால் அவற்றை இணையத்தில் ஏற்றி விடுவோம் என்றும் பயமுறுத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே இவர்களுடைய வலையில் பல ஆண்கள் சிக்கி வந்த நிலையில், பலர் பயந்து போய் பணமும் கொடுத்துள்ளனர். இவர்களது சதி வலையில் ஓமலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பூபதி (32) என்பவரும் சிக்கி பணம் மற்றும் நகையை இழந்துள்ளார்.
இது குறித்து அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கவே, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த செம்மாண்டப்பட்டியை சேர்ந்த முருகேசன் (36), செல்வன் (28), ராகிபட்டியைச் சேர்ந்த திருமால் அழகன் (21), பிரவீன் குமார் (23), பூசாரிப்பட்டியைச் சேர்ந்த போலி வக்கீல் அலமேலு (25) உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இதே சதி வலையில் சிக்கிய காமலாபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கணேசன் (44) அளித்த புகாரின்படி, பணம் பறித்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஓமலூர் ஆர் சி செட்டிபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஜனார்த்தனன், ஜனாஅம்சபிரியன், செம்மாண்டப்பட்டி ஸ்ரீதர், ஆர்சி செட்டிப்பட்டி கவுதமன் ஆகிய நான்கு பேரை ஓமலூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
முதற்கட்டமாக அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும், இக்குற்றச்செயலுக்கு அவர்கள் பயன்படுத்திய செல்போன்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் காவல் உதவி ஆய்வாளர், பேருந்து ஓட்டுநர் உட்பட 9 பேரை ஏமாற்றி தங்களுடைய வலையில் சிக்க வைத்து பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.