பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து மற்றும் மனைவி மீது வழக்குப்பதிவு!
பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியை அடுத்த பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து. யூடியூபரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் வசித்து வரும் அதே பகுதியில் முத்துமகேஷ் - பாலஅமுதா என்ற தம்பதியரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
நவ.2 ஆம் தேதி மாலை நடிகர் ஜி.பி.முத்துவின் இரண்டு மகன்களும் சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வீட்டிற்கு வந்த முத்துமகேஷ் சாலையில் ஏன் விளையாடுகிறீர்கள் என அதட்டியதாக தெரிகிறது. இதையடுத்து இரண்டு சிறுவர்களும் அங்கிருந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் முத்துமகேஷ் வீட்டிற்கு வந்த ஜி.பி.முத்து முத்துமகேஷை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதைக் கேட்ட முத்துமகேஷின் மனைவி எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் பொறுமையாக இருங்கள் என கூறியப்படி வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த ஜி.பி.முத்துவின் மனைவி அஜிதா, உறவினர்களான அனிதா மற்றும் கணேசன் ஆகியோர் முத்துமகேஷின் மனைவியை கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண்ணுக்கு வலது பக்க தாடையில் பல் உடைந்ததாக தெரிகிறது. மேலும் பின்பக்க தலையிலும், வலது முழங்கையிலும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் நடிகர் ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, உறவினர்கள் அனிதா மற்றும் கணேசன் ஆகிய நான்கு பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குலசேகரன்பட்டினம் போலீசார் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக , ஜி.பி.முத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “மகேஷ் என்பவர் குடித்து விட்டு பைக்கில் வந்த போது கூலத்திரு பகுதியில் நின்ற எனது மகன்களை திட்டி உள்ளார். மேலும் குடிபோதையில் அவரது மனைவி பாலஅமுதாவை அடித்தார். இதை அனைவரும் பார்த்தார்கள். சாட்சிகள் உள்ளன. ஆனால், நான் அடித்ததாக என் மீது பொய் வழக்கு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக நானும் புகார் கொடுத்தேன் ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். என் மீது தவறில்லை ஆண்டவன் இருக்கிறான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்” என ஆவேசமாக பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.