வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம்; பார்வையாளர் பீதி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஐந்து வயதான 'சேரு' என்கிற ஆண் சிங்கம் உணவளிக்கும் இடத்திற்கு வராமல் திடீரென மாயமாகிய சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகப் பெரிய பழமையான பூங்காவாகும். இந்த பூங்காவில் சுமார் 1490 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் நவீன வசதிகளுடன் சுமார் 180 வகையான 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் உலாவும் இடமான 'லயன் சபாரி' 25 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வையாளர்கள் சிங்கம் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்பட்ட பிரத்யேக வாகனத்தின் மூலம் சென்று சிங்கம் உலாவதை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த சிங்கம் உலாவும் இடத்தில் சங்கர்,ஜெயா,புவனா உள்ளிட்ட ஏழு சிங்கங்கள் உள்ளன. இதில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சங்கர் என்ற சிங்கத்திற்கு வயதாகி வந்ததால் புதிதாக பெங்களூருபொம்மகெடா பகுதியில் இருந்து 'சேரு' என்ற சிங்கத்தை வண்டலூர் உயிரியல் பூங்கா கொண்டு வந்து சிங்கம் உலாவிடத்தில் விட்டு பழக்கப்படுத்தி வந்தனர்.
தினந்தோறும் வழக்கமாக சிங்கங்கள் உலாவும் இடத்திலிருந்து உணவு அளிக்கும் இடத்திற்கு அவை தானாக வந்துவிடும். ஆனால் ஐந்து வயதாகி உள்ள சேரு என்கிற புதிய சிங்கம் நேற்று முன்தினம் முதல் சிங்கங்களுக்கு உணவளிக்கும் இடத்திற்கு வரவில்லை. மேலும் அந்த சிங்கம் உலாவும் இடத்தில் இருந்து மாயமாகியுள்ளது. இது குறித்து சிங்கங்களுக்கு உணவளிக்கும் ஊழியர்கள் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதனால் அதிர்த்தியடைந்த பூங்கா அதிகாரிகள் சேரு சிங்கத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். மேலும் அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் சிங்கம் உலாவும் இடத்தில் தேடினர். அப்போது அந்த சிங்கம் உலாவிட பகுதியில் இருந்து 25 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டுப் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பூங்கா அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவின் உதவி இயக்குநர் மணிகண்ட பிரபுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் உலாவும் இடத்தில் ஏழு சிங்கங்கள் உள்ளன. தினம்தோறும் உலாவிடத்திலிருந்து உணவு அளிக்கும் இடத்திற்கு சிங்கங்கள் தானாக வந்துவிடும்,ஆனால் நேற்று முன்தினத்தில் இருந்து இந்த ஐந்து வயதாகியுள்ள சேரு சிங்கம் உணவளிக்கும் இடத்திற்கு வரவில்லை. பொதுவாக இந்த சிங்கங்கள் மூன்று நாட்கள் உணவு உண்ணாமல் தாக்கு பிடிக்கும். அதன் பிறகு அந்த சிங்கம் தானாகவே வந்துவிடும்.
சேரு சிங்கத்தை கடந்த இரண்டு வருடங்களாக சிங்கம் உலாவிடத்தில் சுற்றிவர பழக்கப்படுத்தி வருகிறோம். திடீரென சிங்கம் உணவளிக்கும் இடத்திற்கு வரவில்லை. சேரு சிங்கம் இன்றைக்குள் உணவளிக்கும் இடத்திற்கு வந்துவிடும். 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிங்கம் உலாவிடத்திலிருந்து சிங்கங்கள் வெளியே செல்வதற்கு எந்த வழியும் இல்லை. சுற்றி சுற்றுச்சுவர், முள் வேலிகள் போடப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.
இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏற்கெனவே சிங்கம் உலாவிடத்தில் இருந்துவரும் புவனா என்ற சிங்கத்தை பழக்கப்படுத்தும்போதும் இதேபோன்று இரண்டு நாட்கள் உணவு அளிக்கும் இடத்திற்கு வராமல் காட்டுப் பகுதியில் இருந்தது. அதன் பிறகு மீண்டும் அந்த சிங்கம் வந்துவிட்டது. இது வழக்கமாக நடக்கும் ஒரு நடைமுறைதான்" என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் உலாவிடத்தில் இருந்து ஐந்து வயது சேரு என்கிற ஆண் சிங்கம் உணவு அளிக்கும் இடத்திற்கு வராமல், திடீரென மாயமாகிய சம்பவம் பார்வையாளர்கள மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.