காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர சோதனை!!

அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடியில் காந்தி நகரில் அமைந்துள்ள நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, வேலூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், மோப்ப நாய் “ரீட்டா” மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் அழைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து முதற்கட்ட தகவல்களை திரட்டிய போலீசார், இந்த மிரட்டலை விடுத்த நபர் மற்றும் அனுப்பப்பட்ட காரணம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் மட்டுமின்றி, கடந்த சில நாட்களாகவே மாநிலம் முழுவதும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த வகையான மிரட்டல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காட்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி கூறுகையில், "காந்தி நகர் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கிடைக்கப்பெற்றதும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சேர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி எந்த விதமான வெடிகுண்டும் அல்லது அது போன்ற ஆபத்தான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை, காவல்துறை முழுமையாக கண்காணித்து வருகிறது.
எந்த சந்தேகமான தகவலையும் பொதுமக்கள் உடனடியாக போலீசாரிடம் தெரிவித்து, ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வகை மிரட்டல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய, தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தேவையானால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்” என்றார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் இல்லம், சென்னை ஆளுநர் மாளிகை, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.