பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பி.டி. உஷாவின் கணவர் வி. சீனிவாசன் (64) அவரது வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர தடகள வீராங்கனையான பி.டி.உஷா, தனது ஓய்வுக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அவரது கணவர் வி.சீனிவாசன் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனிவாசன், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் ஓய்வுபெற்ற டிஎஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 1991 ஆம் ஆண்டு தனது உறவினரான பி.டி. உஷாவை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உஜ்வால் விக்னேஷ் என்ற மகனும் உள்ளார்.

சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால் பி.டி.உஷா டெல்லியில் இருந்துள்ளார். கணவர் இறந்த தகவலறிந்த அவர், தற்போது கேரளா புறப்பட்டுள்ளார். சீனிவாசன் இறந்த செய்தியை அறிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி, பி.டி. உஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் சீனிவாசனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "பி.டி. உஷாவின் கணவரான சீனிவாசனின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். உஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு, இழப்பை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்" என்று எழுதியுள்ளார்.
பி.டி. உஷாவின் விளையாட்டு மற்றும் அரசியல் வாழ்க்கை முழுவதும் பெரும் ஆதரவாக இருந்து, அவரது பல சாதனைகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.