பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய்களுடன் போலீஸார் சோதனை

பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய்களுடன் போலீஸார் சோதனை

முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் நீரை தடுத்து நிறுத்தப்பட்டு கிழக்கு நோக்கி தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

தமிழக தென்மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில், இந்த அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநிலம் திருச்சூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இத்தகவல் இடுக்கி ஆட்சியர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் ராஜ்மோகன் தலைமையில் 11 பேர், 2 மோப்பநாய் ஆகியவற்றுடன் அணையில் சோதனை நடைபெற்றது. தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மதகுகள், பேபி அணை, பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இருப்பினும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் வந்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது.

இது குறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில், புலிகள் காப்பக அடர் வன பகுதிக்குள் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. வெளியாட்கள் யாரும் இங்கு செல்ல முடியாது. இதனால் வெடிகுண்டு வைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் இதுகுறித்து சோதனை நடைபெற்றது என்றனர்.