சென்னை பாரிமுனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - இருவர் கைது
பாரிமுனையில் ரூ.2 கோடி மதிப்புடைய ஓஜி கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் போதைப் பொருள் விற்பனை, கடத்தல், உட்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பாரிமுனை பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள ஒரு டீக்கடை அருகே மறைந்திருந்து, கண்காணித்தனர்.
அப்போது, அந்த பகுதிக்கு சொகுசு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், கையில் ஒரு பையுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் விலையுயர்ந்த ஓஜி கஞ்சா என்ற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த அமீருதீன் (36), திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (29) என்பதும், அமீருதின் சென்னை மதுரவாயல் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
அதையடுத்து அவர்களிடம் இருந்த 2.3 கிலோ உயர் ரக ஓஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், சொகுசு கார் மற்றும் 3 ஸ்மார்ட் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, இவர்களுக்கு விலை உயர்ந்த ஓஜி கஞ்சா எப்படி கிடைத்தது? எங்கிருந்து வாங்கி வந்தார்கள்? யாருக்கெல்லாம் இதை விற்பனை செய்துள்ளார்கள்? இவர்களுடன் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.