கோவையில் 5 வயது சிறுவன் கடத்தல்: 2 வடமாநில தொழிலாளர்கள் கைது

கோவையில் 5 வயது சிறுவன் கடத்தல்: 2 வடமாநில தொழிலாளர்கள் கைது

பழி வாங்கும் நோக்கில் வடமாநில தொழிலாளியின் 5 வயது மகனை கடத்தி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இம்ரான் என்கிற அப்துல் ஹக் (29). இவரது மனைவி பர்வீன். இவர்களுக்கு ஹூமாயூன் (5) என்ற மகன் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஓரைக்கல்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் தங்கி கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களது மகன்  தொழிற்சாலை குடியிருப்பில் இருந்து திடீரென காணாமல் போனார். இதனையடுத்து, இம்ரான் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ‘உங்கள் மகனை கடத்தி விட்டோம். ரூ. 2 லட்சம் பணம் கொடுத்தால் விட்டு விடுவோம்’ என கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இம்ரான், இது குறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், செல்போன் சிக்னல் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன்படி,  பாலக்காடு சென்ற போலீசார், பதுங்கி இருந்த 2 வடமாநில இளைஞர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

கைது செய்யப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் கடத்தலில் ஈடுபட்டது அதே தொழிற்சாலையில் வேலை செய்யும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுலைமான் அலி, அன்வர் அலி என்பது தெரிய வந்தது. மேலும், இவர்கள் இருவரையும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சொரிபுல் என்பவர் இடைதரகராக செயல்பட்டு பணிக்கு சேர்த்துள்ளார். ஆனால், ஆலையில் இருந்து இவர்களுக்கு வழங்கிய சம்பளத்தை சொரிபுல் கையாடல் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் சொரிபுல்லை பழிவாங்கும் நோக்கில் அவரது உறவினர் இம்ரானின் மகனை கடத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பணத்திற்குகாக வடமாநில தொழிலாளர் மகனை சக தொழிலாளர்களே கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.