நெல்லை அருகே பயங்கரம்! அசாம் மாநில டிரைவர் அடித்துக்கொலை

நெல்லை அருகே பயங்கரம்! அசாம் மாநில டிரைவர் அடித்துக்கொலை

திருநெல்வேலி மாவட்டம், கோட்டை கருங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மது போதை தகராறில் அசாம் மாநிலத்தை சேர்ந்த டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிஜ் அலி (38) மற்றும் சுபி ஆலம் கான் (33). இருவரும் திருநெல்வேலி மாவட்டம், கோட்டை கருங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் தங்கி ஓட்டுநராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்  இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மதுபோதையில் தகராறு செய்த தமிஜ் அலியை அடித்து, அவர் தங்கியிருந்த அறையைவிட்டு சுபி ஆலம் வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த தமிஜ் அலி இன்று அறையில் படுத்திருந்த சுபி ஆலம் கானை கம்பியாலும், கல்லாலும் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுபி ஆலம் கான் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட சுபி ஆலம் கான்
கொலை செய்யப்பட்ட சுபி ஆலம் கான் 

மேலும், இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிஜ் அலியை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மாநிலத்தை சேர்ந்த இருவரிடையே மது போதையால் ஏற்பட்ட தகராறு கொலை சம்பவத்தில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் கூறுகையில், ''இந்த கொலை தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு லாரி ஓட்டுநர்களிடையே பிரச்னை ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக விசாரணையை தொடங்கினோம். அப்போது கொலை செய்யப்பட்டவரும், கொலை செய்தவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் கொலை செய்த நபரை உடனடியாக கைது செய்தோம். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று கூறினார்.