3வது பிரசவத்திற்கும் மகப்பேறு கால விடுப்பு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி தனது 3வது பிரசவத்திற்காக கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 7ம் தேதி வரை பேருகால விடுப்பு கேட்டு உயர் நீதிமன்ற பதிவாளரிடம் (நிர்வாகம்) விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறையின் கடிதத்தின் அடிப்படையில் 3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது என்று காரணம் கூறப்பட்டது.
இதை எதிர்த்து மங்கையர்கரசி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், தனக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவானது, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஷமிம் அகமது அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மகப்பேறு விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் 3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, 3வது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கேட்டு உமாதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி இந்த நீதிமன்றம் பேறுகால விடுப்பை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரருக்கு பேறுகால விடுப்பை நிராகரித்த உயர் நீதிமன்ற பதிவாளரின் (நிர்வாகம்) உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு 2025 ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 7ம் தேதி வரை உரிய பணப் பலன்களுடன் கூடிய பேறுகால விடுமுறையை ஒரு வாரத்திற்குள் பதிவாளர் வழங்கிட வேண்டும்.
இனியும் இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வராத வகையில் இந்த உத்தரவைஅனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். அதேபோல், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.