'வந்துட்டியாப்பா...' வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம் 3 நாட்கள் கழித்து திரும்பியது!

'வந்துட்டியாப்பா...' வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம் 3 நாட்கள் கழித்து திரும்பியது!

மூன்று நாட்களுக்குப் பிறகு ஷெரியார் சிங்கம் அது உணவு உண்டு தங்குமிடத்திற்கு வந்துவிட்டதாக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டின் மிகப் பெரிய பழமையான பூங்காவாகும். இந்த பூங்காவில் சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் நவீன வசதிகளுடன் சுமார் 180 வகையான 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் உலாவும் இடமான லயன் சபாரி 25 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வையாளர்கள் பிரத்யேக வாகனத்தில் சென்று சிங்கங்கள் உலாவதை அருகில் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், லயன் சபாரியில் சங்கர், ஜெயா, புவனா உள்ளிட்ட மூன்று பெண் மற்றும் நான்கு ஆண் என ஏழு சிங்கங்கள் உள்ளன. இதில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சங்கர் என்ற சிங்கத்திற்கு வயதானதால், புதிதாக பெங்களூரு பன்னேரஹட்டா உயிரினப் பூங்காவிலிருந்து ஷெரியார் என்ற 5 வயது சிங்கம் விலங்கு பரிமாற்றத்தின் மூலம் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

அதிர்ச்சி கொடுத்த ஷெரியார்

இதையடுத்து ஷெரியார் சிங்கத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரி இடத்தில் விட்டு பழக்கப்படுத்தி வந்தனர். அந்த சிங்கம் தினந்தோறும் சிங்கங்கள் உலாவிடத்திலிருந்து உணவு அளிக்கும் இடத்திற்கு தானாக வந்துவிடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி முதல் ஷெரியார் சிங்கம் தங்குமிடத்திற்கு வராமலும், உலாவிடத்தில் இருந்தும் மாயமானது.

பூங்கா அதிகாரிகள் நிம்மதி

மேலும் அதிகாரிகள் தொடர்ந்து ட்ரோன் கேமரா மூலம் சிங்கத்தை லயன் சபாரி முழுவதுமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த சிங்கம் லயன் சபாரி அமைந்துள்ள 25 ஏக்கர் காட்டுப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பூங்கா அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

மேலும் ஷெரியார் சிங்கத்தின் காலடி தடயங்கள் லயன் சபாரி எல்லைக்குள் பதிவாகி இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். முன்னதாக, வனத்துறை சார்பில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, சிங்கம் கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க 10 கேமராக்களும் நிறுவப்பட்டன. இரவிலும் சிங்கத்தை காணும் வகையில் பிரத்யேக ட்ரோன் கேமராக்கள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு ஷெரியார் சிங்கம் அது உணவு உண்டு தங்குமிடத்திற்கு வந்துவிட்டதாக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்கம் அதன் தங்குமிடத்திற்கு ஓடி வரும் வீடியோ காட்சிகளையும் பூங்கா நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.