வீட்டில் திடீர் தீ விபத்து: மூச்சுத் திணறி உயிரிழந்த தேமுதிக முன்னாள் எம்எல்ஏவின் சகோதரி!
ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவரின் வீட்டில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. அங்கு முதல் தளத்தில் ஆனந்த் பிரதாப் (64) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒய்வு பெற்றவர். இவரது மனைவி சசிபாலா (58). இவர்களுக்கு ரோகித் ஆனந்த் (23) என்ற மகனும், பூஜா அனந்த் (24) என்ற மருத்துவம் படித்து வரும் மகளும் உள்ளனர். அனைவரும் குடும்பமாக அந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டில் இன்று அதிகாலை திடீரென மளமளவென தீ பரவ தொடங்கியுள்ளது. இதனால், செய்வதறியாமல் அனைவரும் கத்தி கூச்சலிட்டனர். ஆனால், முன் கதவு பூட்டப்பட்டிருந்ததால் யாராலும் உதவ உள்ளே வர முடியவில்லை. இந்நிலையில் இவர்கள் எவ்வளவோ போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. அதனால், மனைவி சசிபாலா தனது கணவர், மகன், மகளை கழிவறைக்குள் நிற்க வைத்து விட்டு, முன் அறை கதவை திறக்க முயற்சித்து முதல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
இதற்கிடையே, கதறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புதுறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த கிண்டி தீயணைப்பு வீரர்களும், ஆதம்பாக்கம் போலீசாரும் உடனடியாக வீட்டின் பால்கனி வழியாக உள்ளே வந்து கழிவறை கண்ணாடியை உடைத்து அங்கிருந்த ஆனந்த் பிரதாப், மகன், மகள் ஆகியோரை மீட்டு அம்புலன்ஸ் முலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சசிபாலா முதல் அறையில் மயங்கி கிடந்ததை பார்த்த போலீசார் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.