மலைப்பகுதியில் வசிக்கும் பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு - ஏன் தெரியுமா?

மலைப்பகுதியில் வசிக்கும் பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு - ஏன் தெரியுமா?

நோய்களில் மிகவும் பிரபலமானது மற்றும் சகஜமானது நீரிழிவு நோய். இப்பொழுது அதற்கு போட்டியாக தைராய்டு நோயும் சமமாக பரவி வருகிறது. தைராய்டு நோய் குறித்த பல்வேறு ஆய்வுகளின் கணிப்புகளின்படி (NCBI), இந்தியாவில் சுமார் 42 மில்லியன் மக்கள் தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தைராய்டு சுரப்பி என்பது கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவத்தில் (butterfly-shaped) அமைந்துள்ள ஒரு முக்கியமான நாளமில்லாச் சுரப்பியாகும். தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்றே கூறலாம். தலைமுடியில் இருந்து கால் நகம் வரை, அதாவது உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளின் வளர்சிதை மாற்றம் தைராய்டை நம்பியுள்ளது.

இந்த சுரப்பி கழுத்தில் இருந்தாலும், மூளையின் கீழ் இருக்கும் பிட்யூட்டரி மற்றும் ஹைப்போதெலாமஸ் சுரப்பிகள் தான் அதை கண்ட்ரோல் செய்கின்றன. பொதுவாக, இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக பலரும் தைராய்டு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், 11.4 சதவீத பெண்களும், 6.2 சதவீத ஆண்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதெல்லாம் சரி. இப்போது இந்த தைராய்டு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றால் கண்டிப்பாக இருக்கிறது என்பது தான் எங்கள் பதில். கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இயற்கையாகவே கடல் மட்டத்திலிருந்து விலகி, மண்ணிலும் தண்ணீரிலும் அயோடின் சத்து குறைவாகக் காணப்படும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், இதன் காரணமாகவே தொண்டை வீக்கம் (Simple Goitre) போன்ற தைராய்டு குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர்.

மண்ணில் அயோடின் குறைபாடு: மலைப்பகுதிகள் பொதுவாக கடல் மட்டத்தில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளன. இதனால், அந்தப் பகுதிகளில் உள்ள மண் மற்றும் தண்ணீரில் அயோடின் சத்தின் அளவு குறைவாகவே காணப்படுகிறது. கடலில் இருந்து வரும் அயோடின் நிறைந்த உப்புத் துகள்கள் மலைப்பகுதிகளின் மண் வரை சென்றடைவது இல்லை.

மேலும், மலைகளில் பெய்யும் அதிகப்படியான மழை மற்றும் உருகும் பனிநீர் ஆகியவற்றால், மண்ணில் உள்ள அயோடின் சத்து அடித்துச் செல்லப்படுகிறது. எனவே, அங்கு விளையும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களிலும் அயோடின் சத்து இயற்கையாகவே குறைவாகவே இருக்கும்.

குடிநீரிலும் குறைபாடு! மலைப்பகுதிகளின் குடிநீரும் உருகும் பனி மற்றும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டிருப்பதால், அதிலும் அயோடின் சத்து குறைவாகவே இருக்கும். இந்த அயோடின் குறைபாடுள்ள உணவு மற்றும் நீரைத் தொடர்ந்து உட்கொள்வது, காலப்போக்கில் அயோடின் பற்றாக்குறைக்கு வழிவகுத்து, தொண்டை வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே காரணம்.

தைராய்டு சுரப்பியும் அயோடினின் முக்கியத்துவமும்!

தைராய்டு சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம் எனப்படும் முக்கிய உடலியல் செயல்முறைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த வளர்சிதை மாற்றம், முடி முதல் நகம் வரை உடலின் அனைத்து உறுப்புகளின் வளர்ச்சி, ஆற்றல் உற்பத்தி மற்றும் செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியம்.

அதைராய்டு ஹார்மோன்களை, குறிப்பாக தைராக்சின் மற்றும் ட்ரையோடோதைரோனின் ஆகியவற்றை உற்பத்தி செய்ய அயோடின் சத்து ஒரு முக்கிய மூலப்பொருளாகும். அயோடின் இல்லாமல் தைராய்டு சுரப்பால் போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாது.

தைராய்டு எப்படி ஏற்படுகிறது? ஒருவரின் உணவில் அயோடின் பற்றாக்குறை ஏற்படும்போது, உடலில் தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறைகிறது. இதை சமன்செய்ய, மூளையின் கீழே உள்ள பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland), தைராய்டை அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தூண்டும் தைராய்டு-தூண்டுதல் ஹார்மோனை (TSH) அதிகம் வெளியிடுகிறது.

அதிகப்படியான TSH தூண்டுதலால், தைராய்டு சுரப்பி தன்னால் இயன்ற அளவு அயோடினைப் பிரித்தெடுக்கவும், ஹார்மோனை உற்பத்தி செய்யவும் முயற்சி செய்கிறது. இந்த செயல்பாட்டின் விளைவாக, தைராய்டு சுரப்பியின் திசுக்கள் வீங்கிப் பெரிதாகி, கழுத்தில் ஒரு வீக்கமாகத் தெரிகிறது. இதுவே தொண்டை வீக்கம் (Goitre) எனப்படுகிறது.

இந்தக் குறைபாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக, அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதை கட்டாயமாக்கியதுடன், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வாழும் மலைவாழ் பெண்களுக்கு அயோடின் செறிவூட்டப்பட்ட பொட்டுகளை இலவசமாக வழங்குவது போன்ற புதுமையான திட்டங்களையும் செயல்படுத்தி, அயோடின் பற்றாக்குறையை நீக்க முயன்று வருகின்றன.

ஜீவன் பிந்தி:

ஜீவன் பிந்தி (Jeevan Bindi), அல்லது ‘உயிர் காக்கும் பொட்டு’ (Life-Saving Dot) என்பது அயோடின் பற்றாக்குறையைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட ஒரு எளிய யோசனையாகும். இந்த பொட்டுகளின் மேற்பரப்பில் 150 முதல் 200 மைக்ரோகிராம் அயோடின் பூசப்பட்டிருக்கும். இது ஒரு நிக்கோட்டின் பேட்ச் (Nicotine Patch) போல செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியப் பெண்களின் கலாசார மற்றும் அழகு சாதனப் பழக்கவழக்கங்களில் ஒன்றான பொட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம், உடலில் அயோடினை தோலின் வழியாக உறிஞ்சச் செய்வதே இதன் நோக்கமாகும். போதுமான அயோடின் இல்லாதபோது மட்டுமே தோல் அதை உறிஞ்சும் என்று விவாதிக்கப்படுகிறது.இந்த பொட்டுக்களை நீண்ட நேரத்திற்கு நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது ஜீவன் பிந்தி.