சுடச்சுட டீ குடிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை!

சுடச்சுட டீ குடிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை!

காலையில் எழுந்தவுடன் ஆவி பறக்கும் டீ அல்லது காபி குடிப்பது என்பது பலரது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. "நல்லா சூடா ஒரு டீ சாப்பிட்டா தான் தெம்பா இருக்கும்" என்று சொல்பவர்கள் நம்மில் ஏராளம்.

ஆனால், அளவுக்கு அதிகமான வெப்பநிலையில் பானங்களை அருந்துவது நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக உணவுக்குழாய்க்கு (Oesophagus) பெரும் தீங்கை விளைவிக்கும் என்று Hot beverage intake and oesophageal cancer in the UK Biobank: prospective cohort study என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிக வெப்பமும் உணவுக்குழாய் புற்றுநோயும்: நாம் அருந்தும் பானங்கள் மிக அதிக வெப்பநிலையில் (பொதுவாக 65°C-க்கு மேல்) இருக்கும்போது, அவை நமது தொண்டையிலிருந்து வயிறு வரை செல்லும் 'உணவுக்குழாய்' திசுக்களை நேரடியாக பாதிக்கின்றன. இது 'உணவுக்குழாய் புற்றுநோய்' (Oesophageal Cancer) ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

நமது உடலின் உட்புற திசுக்கள் மிகவும் மென்மையானவை. கொதிக்கும் நிலையில் உள்ள பானத்தை நாம் குடித்தால், அது உணவுக்குழாயின் உள்சுவர்களைத் தீய்த்து விடுகிறது (Thermal Injury). இதனால் அந்த பகுதியில் செல்கள் சேதமடைகின்றன. இந்த சேதம் மீண்டும் மீண்டும் ஏற்படும்போது, அந்த திசுக்கள் தங்களை தாங்களே புதுப்பித்து கொள்ளும் முயற்சியில் மாற்றமடைந்து, காலப்போக்கில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கோப்புப்படம்

அறிகுறிகள் என்ன? இந்த பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் தெரியாது. இருப்பினும் பின்வரும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும்.

  • உணவை விழுங்குவதில் சிரமம்.
  • நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் அல்லது வலி.
  • காரணமில்லாமல் எடை குறைதல்.
  • நாள்பட்ட இருமல் அல்லது குரல் மாற்றம்.

எச்சரிக்கையுடன் இருப்பது எப்படி? சூடான பானங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. ஆனால், அதை உட்கொள்ளும் முறையில் சில மாற்றங்களை செய்யலாம்.

  1. டீ அல்லது காபி தயாரித்தவுடன் குடிக்காமல், குறைந்தது 4 முதல் 5 நிமிடங்கள் வரை ஆறவிட்டு, அதன் வெப்பநிலை குறைந்த பிறகு குடிப்பது பாதுகாப்பானது.
  2. பானம் அருந்துவதற்கு இதமான சூட்டில் (Lukewarm) இருப்பதை உறுதி செய்யுங்கள். நாக்கில் பட்டதும் சுள்ளென்று சுடும் நிலை ஆபத்தானது.
  3. ஒரே மூச்சில் மிகச் சூடான பானங்களை உள்ளே இறக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

உணவுக்குழாய் புற்றுநோய் என்பது ஆரம்பத்தில் கண்டறிய கடினமான மற்றும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. "சுடச்சுடக் குடித்தால் தான் திருப்தி" என்ற நமது சிறு பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். சில நாடுகளில் மிகவும் சூடாகக் குடிக்கப்படும் 'மேட் டீ' (Mate Tea) போன்ற பானங்களால் அந்தப் பகுதி மக்களிடையே உணவுக்குழாய் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.