தொ.பரமசிவன் பெயரில் சாலை... நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு!

தொ.பரமசிவன் பெயரில் சாலை... நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு!

பாளையங்கோட்டையில் ஒரு சாலைக்கு மறைந்த எழுத்தாளர் தொ.பரசிவன் பெயர் வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மைய கூட்டரங்கில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் துணை மேயர் ராஜூ, ஆணையாளர் மோனிகா ராணா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பாளையங்கோட்டையை சேர்ந்தவரான மறைந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் நினைவாக பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் பகுதியில் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை ரவுண்டானா முதல் தூய சவேரியார் கல்லூரியை அடுத்த மரியா கேண்டீன் வரையுள்ள 1 கிலோ மீட்டர் சாலைக்கு அவரது பெயர் சூட்ட சிறப்பு தீர்மானத்தை மேயர் ராமகிருஷ்ணன் வாசித்து நிறைவேற்றினார்.

மேலும், நெல்லை மாநகராட்சி பகுதியில் ஏற்படும் காற்று மாசுவை குறைக்கும் விதமாக மாநகராட்சி புதிய நடவடிக்கையாக மாநகர பகுதிகளில் கட்டப்படும் புதிய கட்டடம், வணிக வளாகம் போன்றவைகளுக்கு கட்டுமான அனுமதி பெற வேண்டும் என்றால் அனுமதி பெறும் காலியிடத்தில் மரக்கன்று நட்டு அந்த புகைப்படத்துடன் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மாநகராட்சி பகுதியில் புதிய கட்டடத்திற்கான அனுமதியை பெறுவதற்கான சட்டத் திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மேயர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. பின்னர், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் மரம் நட்டால் தான் வணிக வளாகம் உள்பட கட்டுமானங்களுக்கு அனுமதி என்று மாநகராட்சி அறிவித்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போல், நெல்லையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தொ.பரமசிவன் பெயரில் சாலைக்கு சூட்டுவது தொடர்பான அறிவிப்புக்கு தமிழறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் வரவேற்பு அளித்துள்ளனர். தொ.பரமசிவன் திராவிட பண்பாட்டு ஆய்வாளராகவும் மானிடவியல் ஆய்வாளராகவும் திகழ்ந்தவர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர், தென் மாவட்ட மக்களின் வாழ்வியலையும் பண்டைய கால நாகரிகத்தையும் எளிமையான முறையில் பல நூல்களாக எழுதி உள்ளார். இவர் எழுதிய அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில் போன்ற பல நூல்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தனது 70-வது வயதில் காலமானார். இவரது நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.