திருமலை கலப்பட நெய் விவகாரம்: 24 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் கலப்பட நெய்யால் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
சந்திரபாபு நாயுடு அரசு ஆட்சிக்கு வந்ததும் சிபிஐ விசாரணை தொடங்கியது. சிபிஐ இணை இயக்குனர் விரேஷ் பிரபு, டிஐஜி முரளி ராம்பா உட்பட 30 பேர் கொண்ட குழு 15 மாதங்களாக இந்த வழக்கை விசாரித்தது. ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில் புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முதலில் தமிழகத்தில் இருந்துதான் கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்டிருக்கலாம் என நினைத்து விசாரணையை தொடங்கினர். ஆனால், இதற்கு முக்கிய காரணம் போலேபாபா ஆர்கானிக் பால்பொருள் தயாரிப்பு நிறுவனம் என்பதும், இதற்கு பலர் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஆதலால், போலே பாபா பால் பொருள் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர்கள் போமில் ஜெயின், விபிஎன் ஜெயின் ஆகியோரை சிபிஐ புலனாய்வு குழு கைது செய்துள்ளது.
மேலும், ஆந்திரா உட்பட 12 மாநிலங்களை சேர்ந்த பலர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் சிபிஐ புலனாய்வு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதல் குற்றப்பத்திரிகையில் 24 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.