3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 338 ரன்கள் இலக்கு

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 338 ரன்கள் இலக்கு

இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஹென்றி நிக்கோலஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹென்றி நிக்கோலஸ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வேவும் 5 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த வில் யங் - டேரில் மிட்செல் இணை விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதில் வில் யங் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் டேரில் மிட்செலுடன் இணைந்த கிளென் பிலீப்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

அவருடன் இணைந்து விளையாடி வந்த கிளென் பிலீப்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 214 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 103 ரன்களை எடுத்திருந்த நிலையில் கிளென் பிலீப்ஸ் விக்கெட்டை இழக்க, 15 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 137 ரன்களில் டேரில் மிட்செலும் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மிட்செல் ஹெய், ஜக்காரி ஃபால்க்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் ஜோடி சேர்ந்த கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் - கிறிஸ்டியன் கிளார்க் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கிறிஸ்டியன் கிளார்க் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது.