இந்தியா ஓபன் 2026: லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி; முடிவுக்கு வந்த இந்தியா அணியின் பயணம்
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-17, 13-21, 18-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு முன்னேறு வாய்ப்பை தவறவிட்டார்.
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், தைவானைச் சேர்ந்த லின் ஷுன் யி-வை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார்.
இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே சிறப்பாக செயல்பட்ட லக்ஷயா சென் அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி முன்னிலைப் பெற்றார். அதேசமயம் லின் ஷுன்னும் சிறப்பாக செயல்பட முதல் செட்டில் இருந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இதில் லக்ஷயா சென் 21-17 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் லின் ஷுன் கம்பேக் கொடுத்ததுடன் 21- 13 என்ற கணக்கில் செட்டையும் கைப்பற்றி லக்ஷயா சென்னிற்கு அதிர்ச்சியளித்தார். இதனால் போட்டியின் முடிவானது மூன்றாவது செட்டை நோக்கி சென்றது. இதில் யார் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இருவரும் சரிக்கு சமமாக விளையாடிய நிலையிலும், கூடுதல் கவனத்துடன் விளையாடிய லின் ஷுன் 21-18 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் லின் ஷுன் யி 17-21, 21-13, 21-18 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தியதுடன் இந்தியா ஓபன் தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.
அதேசமயம் இந்த தொடரில் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்ஷயா சென், காலிறுதிச் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்படும் பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த, ஆயுஷ் ஷெட்டி, ஹச்.எஸ்.பிரனாய் ஆகியோர் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவினர்.
அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் சாத்வித்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜுன் மற்றும் ஹரிஹரன் அம்சகருணன், மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறினர்.
இதன் காரணமாக நடப்பு இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்களின் பயணமும், பதக்கம் வெல்லும் கனவும் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கிய பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் சோபிக்க தவறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.