ஒன்பது குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

ஒன்பது குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

ஒன்பது குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவரை மத்தியப் பிரதேச மாநில போலீசார் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிண்ட்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 6 குழந்தைகள், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த 3 குழந்தைகள் என கடந்த ஒன்பது பேர் கடந்த இரண்டு வாரங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

1 முதல் 7 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் சிறுநீரக செயலிழப்பே அவர்களின் இறப்புக்கு காரணம் என்று மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. மேலும் அந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் 'டை எத்திலீன் கிளைக்கால்' (DEG) எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து கோல்ட்ரிப் சிரப் மருந்தை ஆய்வு செய்ததில், உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு அதில் 48.6 சதவீதம் 'டை எத்திலீன் கிளைக்கால்' என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ளது என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

மேலும், உயிரிழந்த குழந்தைகள் காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பார்மா என்ற நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் சிரப் மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இருவேறு இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து,தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், குறிப்பிட்ட இந்த மருந்தை உற்பத்தி செய்த நிறுவனம் மற்றும் அதனை பரிந்துரைத்த மருத்துவர் மீது மத்தியப் பிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சிறப்புப் புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் சோனியை ஷிண்ட்வாரா மாவட்டத்துக்குட்பட்ட ராஜ்பால் சௌக் பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.

"பிரவீன் சோனி அரசு மருத்துவராக இருந்தபோதும், ஷிண்ட்வாரா மாவட்டத்துட்பட்ட பிரசியா பகுதியில் அவர் தனியாக சிகிச்சை மையம் நடத்தி வருவதும், அங்கு தான் குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பான இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் பாண்டே தெரிவித்தார்.

மேலும், "சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பிரவீன் சோனி மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 276, 105 ஆகிய பிரிவுகளின் கீழும், மருந்துகள் மற்றும் அழகுச்சாதனங்கள் சட்டத்தின் 27A பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்