சதமடித்து மிரட்டிய மிட்செல் மார்ஷ்! தொடரை வென்று ஆஸ்திரெலியா அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - டிம் செஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய டிம் ராபின்சன் 13 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு களமிறங்கிய மார்க் சாப்மேன், டேரில் மிட்செல் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிம் செஃபெர்டும் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 8 ரன்னிலும், மேத்யூ ஷார்ட் 7 ரன்னிலும், டிம் டேவிட் 3 ரன்னிலும், அலெக்ஸ் கேரி ஒரு ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 ரன்னிலும், மிட்செல் ஓவன் 14 ரன்னிலும், சேவியர் பார்ட்லெட் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்த நிலையிலும், மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து மிரட்டினார். அத்துடன் நிற்கான மார்ஷ் 52 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 103 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் சதமடித்து அசத்திய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.