ஆன்லைனில் வரன் தேடுவதாக நடித்து 3 மாதங்களில் 12 பெண்களிடம் இளைஞர் பண மோசடி - வெளியான அதிர்ச்சி பின்னணி!
ஆன்லைனில் வரன் தேடுவதாக நடித்து பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தாம்பரம் கஸ்தூரிபாய் நகர், கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் கோபிநாதன் (24). இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் செயல்பட்டு வரும் ஆன்லைன் செயலியில் தொழிலதிபர் என பதிவு செய்து, வரன் தேடும் பெண்களுக்கு அனுப்பியுள்ளார்.
மேலும் கோபிநாதன் பல்வேறு சாதி, மதத்தைச் சேர்ந்த பெண்களிடம், 'நானும் உங்கள் சாதி, மதம் தான்' என்று கூறி வரன் தேடும் பெண்களிடம் அறிமுகமாகி பேசி வந்துள்ளார். அப்போது கோபிநாதன் பெண்களிடம், ''நான் மிகப்பெரிய தொழிலதிபர். வசதியான ஒரு குடும்ப பின்னணியை சேர்ந்தவன்'' என்று கூறி உள்ளார்.
இதனை நம்பிய பல பெண்கள் இவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி பேசி வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் கோபிநாதன் தொழில் தொடர்பாக அடிக்கடி வெளியூர் செல்வதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்று, அவர்களில் சில பெண்களை வெளியில் அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரியும் பெண் ஒருவர் ஆன்லைன் செயலியில் இவருடைய விவரங்களை பார்த்து குடும்பத்தினரிடம் தெரிவித்து பேசியுள்ளனர். அப்போது அவரை பிடித்து போகவே, அந்த பெண் தொடர்ந்து கோபிநாத்திடம் பேசி வந்துள்ளார். இதையடுத்து கோபிநாதன் அந்த பெண்ணிடம் தொழில் தொடர்பாக வெளியூர் செல்வதாகவும், வங்கி கணக்கு முடங்கியுள்ளதால் தனக்கு பணம் அவசரமாக தேவைப்படுவதாக கூறி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஜிபே மூலம் பெற்றுள்ளார்.
இதையடுத்து சில நாட்கள் கழித்து தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி சுமார் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை அந்த பெண்ணிடம் மீண்டும் வாங்கி உள்ளார். இதன் பின்னர் மீண்டும் அதே பெண்ணிடம், தனது வங்கிக்கணக்கில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை வங்கி அதிகாரிகள் முடக்கி விட்டதாகவும், அதை மீட்க பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கூறி கோபிநாதன் கடன் கேட்டுள்ளார்.
இதற்காக அந்த பெண் வங்கியில் ஆறு லட்சம் ரூபாய் கடன் பெற்று 3 லட்சம் ரூபாயை கோபிநாத்திடம் வழங்கி உள்ளார். இதே போல் அடிக்கடி கேட்டு மொத்தம் சுமார் 9.80 லட்சம் பணத்தை கோபிநாதன் அப்பெண்ணிடம் இருந்து பெற்றுள்ளார். இதையடுத்து சில நாட்களுக்குப் பிறகு அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு கோபிநாதன் தனக்கு இன்னும் சிறிது நாட்கள் நேரம் வேண்டும் என்றும், இதுதொடர்பாக என் அண்ணன் உன்னுடன் பேசுவார் என்றும் கூறி யாரோ ஒருவரிடம் செல்போனை கொடுத்து பேச வைத்துள்ளார். அவரும், ''இப்போது கல்யாணம் வேண்டாம். பிறகு வைத்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
இதனால் கோபிநாதன் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்த பெண் தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் அவர் தொடர்பான விவரங்களை அளித்து கண்டறியுமாறு கேட்டுள்ளார். தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வு செய்து கோபிநாதன் தொழிலதிபர் கிடையாது என்பதையும், இது போல் பலரிடம் மோசடி செய்து வந்ததையும் கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முடிவில் கோபிநாதனை தாம்பரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது தொழிலதிபர் என்று கூறி கடந்த 3 மாதங்களில் 12க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோபிநாத் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தாம்பரம், கஸ்தூரிபாய் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.