விஜய் ஹசாரே கோப்பை 2025-26: ஷர்தூல் தாக்கூர் விலகல்; ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பொறுப்பு
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளுக்கான மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே கோப்பை. இந்த தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 5 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான 6-வது லீக் போட்டிகள் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மும்பை அணி மிகப்பெரும் மாற்றத்தைச் செய்துள்ளது. அதன்படி விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஷர்தூல் தாக்கூர் காயம் காரணமாக, எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, ஸ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்க தொடர், சையத் முஷ்டாக் அலி தொடர்களில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் காயத்திலிருந்து மீண்ட அவர், எதிர் வரும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான், அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்கும் விதமாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்சமயம் ஷர்தூல் தாக்கூர் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால், அணியின் கேப்டன் பொறுப்பையும் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் மீதமுள்ள லீக் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது தலைமையின் கீழ், மும்பை அணி சிரப்பாக செயல்படும் என்பதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள மும்பை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகள், ஒரு தோல்வி என 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.